மலர்களின் சுகந்தத்தில் திளைத்திருந்தவளை
அத்துவானக் காட்டின் காரிருளில்
யாருமற்ற தனிமையில் தள்ளிவிட்டபிறகுதான்
மின்மினிப்பூச்சிகள்
தென்படுகிறதாவெனத் துழாவ
கொடும்பசி கொண்ட இரை தேடு மிருகத்தின் முன் நிற்கையில்
இருத்தலுக்கும் பிழைத்தலுக்குமான என் தீவிரம் துவங்கியது
ஓலம் அடங்கியதாய் அவை நம்பிய வேளை
என்னுள் நிரம்பிய தீ ஜுவாலை மட்டும் கவனமாய்
யாருமறியாமல் கனன்றபடியிருக்க
ஒளி மீதான என் காதலைக் கண்டுணர வைத்த
மின்மினி காணவியலா
அத்துவானக் காட்டிற்கும், கொடும்பசி கொண்ட மிருகத்திற்கும்
பெருநன்றி.
எனது அதிகமான புரிதலடி
நீ என்ற போதெல்லாம்
அச்சத்தியங்களை சிறுபிள்ளைத்தனக் குறும்போடு
உடைத்தபடியேயிருந்தேன்
உனது அன்புதோயும் சொற்களின் வேகம் குறைந்திருந்தன
லவ் யூ என்ற கூறியது கூறலைத்
தவிர்க்கத் தொடங்கியிருந்தாய்
கொஞ்சல் மொழிக்
கொள்கைகளுக்கு விலக்கு அளித்திருந்தாய்
அகங்காரம் நனைத்தபடி மோதும்
உரையாடல்களுக்குள் பிறந்த வரிகளுக்கு
புது அர்த்தங்கள் தேடத்தொடங்கினோம்
உச்சிவெயில் சூட்டுச்சொற்களோடு
துள்ளியபடியே நெடும்பாலையில் நடந்தோம்
ஈரம் பதிந்தபடி திரண்ட முத்தங்கள் காய்ந்த சருகுகளாயின
நம் சுயங்களின் பெருவெடிப்பு பற்றிய அச்சம்
மௌனத்தின் பாதை நோக்கி நகரச் செய்தது
ஆகாயத்திற்கும் பூமிக்குமான
தொலைவை அடைந்தபடி
பகிர்தல்கள் தோல் சுருங்கி
ஒற்றை வார்த்தையென மாறின
இப்போதும் நீயும் நானும்
காதலித்துக் கொண்டுதானிருக்கிறோம்
நம்மை மெல்ல மெல்ல
புரிந்திருக்கப் பழக்கப்படுத்திக் கொண்டோமா
பிரிந்திருக்கப் பழக்கப்படுத்திக்
கொண்டோமா அன்பே?
அரசமர இலையை வைத்து
பீப்பீ ஊதியவள்
சீத்த இலைகளை கல்லால் நசுக்கி
சோறாக்கியவள்
தேன்மிட்டாயினை வான் பார்க்கத் தூக்கிப்பிழிந்து
வாயில் ஊற்றியவள்
அடிபம்பில் எம்பி எம்பி குதித்து
குடத்தை நிரப்பியவள்
ஜோடிப்புறா விளையாடி காயம்பட்ட முட்டிக்காலில் மண் வைத்தவள்
நாடு பிடித்தலில் தோழிக்காக
பெரிய இடத்தைத் தந்துவிட்டவள்
பிடித்தவர்கள் பெயரை கரும்பலகையில் எழுதி
மாட்டிவைக்காது விட்டவள்
காய்விட்ட நண்பனுக்காக விம்மி விம்மி அழுதவள்
வீட்டுப்பாடம் எழுத பழைய
நோட்டுக் காகிதங்களை தைத்துக்
கொண்டவள்
திரும்ப இயலாக் காலங்களை
புன்னகைகளால் நிரப்புபவள்
அவள் பால்யக்குளத்தில்
கல்லெறிந்து விட்டுக் கால்நனைய அமர்ந்து கொண்டவள்.