அரிந்த வெங்காயத்தை வைத்து
தோசைக்கல்லின் பிடிமானத்தைக் கேள்வி கேட்ட அம்மாவின் மகள்
ஒரு துணிசுற்றிய அச்சை வைத்துக்கொண்டாள்
எப்படியும்
பிடிமானங்களைக் கேள்வி கேட்க
ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது.
ஒற்றைப்பின்னலை
முன்கழுத்துவழி
விசிறி இறக்கிவிட்டுக் கொள்ளத்தெரிந்த
மெர்சி அக்கா
பூச்சூட மாட்டாள்
குறைந்தபட்சம்
ஒற்றைச் செம்பருத்தியாவது
வேண்டும்
சுருள்முடியை இறுக்கி இறுக்கிப்பின்னும்
தேவி சித்திக்கு
கரிசலாங்கண்ணி
முட்டைக்கரு
கேசவர்த்தினி
என்று மகள் கூந்தல்
வளர்ப்பும் அத்தையின்
அன்றாடக் கவலைகளில் ஒன்றாக இருந்தது
சும்மாடு மாதிரி வைத்து அனுப்புவாள்
கொல்லையில் குலுங்கும் கனகாம்பரத்தை
நீலம், சம்பங்கி, மரு, பச்சை, செவ்வரளி, சாமந்தி என்றிருந்த கதம்ப வானவில் அது
இப்போதும்
தஞ்சாவூர்த் தெருமுனைகளில் தேடுகிறேன் அப்பாவின்
பையில் வந்த வானவில்லை
விரல்கள் கோதுகின்றன
சலவைசெய்யப்பட்ட
குட்டைக் கூந்தலை
பூபூ புளியம்பூ
பாடலை நினைவில்கொண்டுவர எத்தனை முயன்றும்
அடுத்தவரி தெரியவில்லை
புறவழிச்சாலையின் நீள்தடுப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பிங்க் நிற அரளி ஆடுகிறது.
நாயகனைப்போல முடிவளர்த்து
நாயகனைப்போல
பெல்பாட்டம் போட்டு
நாயகனைப்போல
அண்ணாந்து மைக் பிடித்து
படம் எடுத்த ராஜண்ணன்
கச்சேரி வைக்க வருபவரிடமெல்லாம்
கேட்ட முதல் சம்பளம்
அந்தப் படம் போட்ட சுவரொட்டிதான்
ராஜண்ணன்
முடிகொட்டி
பெல்பாட்டம் வழக்கொழிந்து
வீடியோ போடும் திருவிழாக்காலம்
வந்தும்
அபூர்வமாக கச்சேரி வைக்கப் போகிறீர்களா
எப்படியும்
இளமையெனும் பூங்காற்றுக்குச் சீட்டெழுதி அனுப்புவார்கள்
நீங்களும்
ராஜண்ணனின் பழைய புகைப்படத்தோடு
ஒரு போஸ்டர் அடித்துவிடுங்கள்.