1. தவம்
ஓவியத்தைப்
பிரிந்த வண்ணங்கள்
கலையிலிருந்து
முழுமையாக விடுபட்டு
ஆதி நிலையைத்
தொட்டுவிடும்
அரை வட்டம்
எஞ்சிய முழுமை
அரூப ஓவியமென
தன் வண்ணத்திற்காகக்
காத்திருப்பதை
யார்தான் அறிவாரோ?
திறந்து கொள்ளும்
பகலவனின்
இமைகளற்ற
கண்கள்
2. சாட்சி
ஓவியத்திலிருந்து
பிரிந்த
வண்ணமொன்று
நடந்து வருவதை
மற்றொரு வண்ணம்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஒரு கணம்தான்
அருகிக் கடக்கையிலே
அரை வட்டம்
நிகழ்ந்து நீங்குகிறது
நிரந்தரமற்ற சாத்தியங்கள்
தற்செயல் எல்லையின்
வடிவாய்
அனைத்தையும்
தேக்குகிறது மேலே
நித்திய ஒளி.
3. Restore Point
ஓவியத்திலிருந்து
பிரிந்த
வண்ணங்கள்
கலையின் அற்புதத்தை
மறுத்து
பெரு வெடிப்பிற்கு
முந்தைய கணத்தின்
மீட்புப் புள்ளியாகும்
சூனிய கணம்
இடறும் குதிரைகளின்
எதிர் நிழல்.
4. தகன மஞ்சள்
ஓவியத்திலிருந்து
பிரியும்
வண்ணமொன்று
தனித்தியங்கும் தன்மையினால்
ஒற்றை வண்ண ஓவியமாகிறது.
வான்காவின் தூரிகையிலிருந்து
கிளம்பும் வயல் வெளி
இரவுகள்
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திக் கொள்ளும்
தூரிகை அறியாப் பொழுதை
அறியத் துடித்தடங்கும்
ஒரு துப்பாக்கி
ரவையின்
மோட்ச நிறம்.
5. சிதைவின் கலை
ஓவியத்திலிருந்து
பிரிந்து செல்லும்
வண்ணங்களைக் கண்டு
நீங்கள் திகைக்கலாம்
அந்த ஓவியத்திற்கு
அப்பால்
ஒரு தளத்தை
உருவாக்கும் அவை
யாரும் நினைத்துவிடாத
சாத்தியங்களை நிகழ்த்துகின்ற
தானே ஓவியமாகிறது
கூட்டிசைவிற்கு எதிரான
பிரிதல் கணத்தின்
எஞ்சும் வண்ணங்களாய்
ஓர் ஓவியம்.
6. பெயர் தெரியாத
ஓவியத்திலிருந்து
பிரிந்து கொள்ளும்
வண்ணம்
சரியான காரணத்தைக்
காட்டுகிறது
தன்னோடு சேர்த்து
ஏழு குறைகள்.
குறைகளை நாம்
ஒன்றும் செய்வதற்கில்லை
முழுமை எய்துவது
குறைகளின்
வழியாகத்தான்.
7. விடுதலை
ஓவியத்திலிருந்து
பிரியப்போகும் வர்ணத்தைக்
குழந்தை சரியாகக்
கணித்துவிட்டது.
அது அதை
சொல்லவேயில்லை
குழந்தைக்கு
பார்வைக் குறையென
அந்த நிறம்
தப்பிவிட்டது.