cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

இமையாள் கவிதைகள்


  • அவள் பெயர் நர்மதை

ஆதி யோகியின் உடலிலிருந்து
சிந்திய வியர்வையின் ஒரு துளியவள்!
பூமியில் ஒரு நதியாகி
விந்திய சத்பூரா மலையிடையிலிருந்து
பூமியை அடைந்து நீர்தேகமாகி,
நிலத்தைப் புணர்ந்து புணர்ந்து
யோனி கொள்ளா காமத்துடன்
கூந்தல் விரித்து உடல் மலர்த்தி
பள்ளம் மேடு கடந்து
பாதையமைத்து
பகல் இரவு மறந்து
பயணித்துப் பயணித்து
கடல் பருகி கடல் பருகி
மீண்டும் நதியாகி
மீண்டும் நதியாகி
காலாதீதமாக
கனன்று கிடக்கிறாள்
நிலத்தோடு புணர்ந்தாலும் கூட
நித்தமும் உயிர்த்தெழும்
நித்தியக் கன்னி அவள்,
எனினும் அடிவயிற்றில்
சிவனைச் சுமக்கும் தாயுமவளே!

ஆதிசங்கரனும் அவன் குருவும்
அதன் பின் ஞானியர் பலரும்
வந்து போயினர் போயினர்!
அவள் கரைமீது சரிந்தன
மகுடங்கள், சாம்ராஜ்யங்கள்!
பல்லவனும் சாளுக்கியனும்
ஹர்ஷர்களும் மோதி மாண்டனர்
விழுந்துபட்டன உடல்கள்
கரைந்து ஓடின குருதி
மாண்டு போயின மக்கள்கூட்டம்
அற்ப அரச சிம்மாசனங்கள்
பல எழுந்து மூழ்கிக் கவிழ்ந்தன

அவளோ கடல் பருகி கடல் பருகி
மீண்டும் நதியாகி மீண்டும் நதியாகி
கனன்று கொண்டேயிருக்கிறாள்
ஆதியோகியின் வியர்வை அவள்
அகத்தியனின் கெண்டியில்
அடங்கிடுமோ அக் கணல்!
சூரியன் எரிந்தாலும்
மழை பொய்த்தாலும்
வற்றாது நீரோட்டம்
நிற்காது அவளோட்டம்
முடியாது அவள் பயணம்
ஒழிக்க ஒழியாத பெருங்காதல்
தணிக்க முடியாத பெருங்காமம்
கொடுத்துத் தீராத முத்தம்
அவள் பயணம்!
அவள் கடல் பருகி கடல் பருகி
மீண்டும் மீண்டும் நதியாகும்
நித்திய நதியவள்.
பித்ருக்களின் கர்மங்களை
அவளில் கரைத்துக் கரைத்து
பின்னும் அவள் மேலும்
தூய்மை கொள்கிறாள்.

பிறவிக்கடலைக் குடித்து
மோட்சம் வழங்கும் தாய்
அவளே முக்திதாயினி!
நதிவலம் காணும் நாயகி!
ஜனனம் மரணம் கடந்த
நித்தியமவள் முக்தியுமவள்!


  • அபூர்வ கவிதை

அபூர்வங்கள் மீது இருந்த பிரேமை
விலகியபோது நான்
என் இளமையைக் கடந்திருந்தேன்.
அபூர்வங்கள் அலுக்கத் தொடங்கிய
காலத்தை மீட்டெடுக்க
ஒரு குட்டி நாயை வாங்கினேன்.
அதன் நட்சத்திரக் கண்கள்
அபூர்வமாக ஒளிர்ந்தன.
அப்போது அபூர்வமான புன்னகை
ஒன்று என்னில் மலர்ந்தது
அதைப் பத்திரமாகப் பொத்தி வைத்தேன்.
குட்டி நாயின் வால்
நர்த்தனம் ஆடியபோது
அபூர்வமாய் என்னுடல் சிலிர்த்தது
அந்தச் சிலிர்ப்பை நீவி விட்டேன்
அது பசலை போல உடலில்
படர்ந்து விரிந்தது
அதில் அபூர்வமாய் சூரியஒளி மின்னிற்று.
ஒளியின் ஒவ்வொரு துகளிலும்
என் இளமையின் சாயல்கள்.
அபூர்வமாய் மயிர்க்கூச்செறிந்தது !!!
மயிர்க்கால்களின் வேர்களிலிருந்து
அபூர்வ பரவசம் உடலெங்கும்
வியாபித்தது!!
அபூர்வ ராகமொன்று
அப்பிரத்தியட்சமாய் அகத்தில் நிறைய
அபூர்வங்கள் மறுசுழற்சி கொண்டன !!


கடைசி முறை

அதுதான் கடைசிமுறை
என்று அறிந்திருக்கவில்லை
ஆனால் கடைசிமுறை
என்ற ஒன்று வரப்போவதை
அறிந்திருந்தேன்.
எல்லாவற்றுக்கும் இருக்கிறது
ஒரு கடைசிமுறை
அது தெரிந்துவிட்டால்
வாழ்க்கையின் புதிர்
அவிழ்ந்துவிடாலாம்,
சுவாரஸ்யம் குறைந்து போகலாம்
முதல் முறைகளிலேயே
ஒளிந்திருக்கிறது கடைசிமுறைகளும்.
கடைசிமுறைகளைக் கைவசம்
வைத்துக் கொண்டேதான்
நாம் பயணிக்கிறோம்
முதல் முறைகளுள்.


கவிதைகள் வாசித்த குரல்:
தேன்மொழி அசோக்
Listen On Spotify :

About the author

இமையாள் .

இமையாள் .

கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இயங்கி வரும் நர்மதா குப்புசாமியின் புனைபெயர் ‘இமையாள்’

: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் “நிரந்தரக் கணவன்” எனும் பெயரிலும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் “சின்ட்ரெல்லா நடனம்” எனும் பெயரிலும் இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. இமையாள் எனும் பெயரில் “ஆண்கள் இல்லாத வீடு” எனும் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Sudha Suresh

அற்புதம்

You cannot copy content of this Website