cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 3 கவிதைகள்

சுபி கவிதைகள்

சுபி
Written by சுபி

1.

இறுகிய பாறையினை
தகர்க்கும் வெடிகளென
யாதொன்றின் மீதான
அபிமானங்களை பேரதிர்வுடன்
சில்லுத்துண்டுகளாய்
கட்டுடைக்கிறது கொடுங்காலமெனும்
அரவம்… அது சட்டை உரித்துப் போட்ட
சுவடுகளென்று புரியாது தான்
பூக்கும் செடிகளை அதன் வழியாகவே
நடுகிறாளொருத்தி
கடைசிச் செடிக்கான குழியைத்
தோண்டும் முன் கூட கவனிக்கவில்லை பிச்சியவள்
அங்கே அரவம் நாவை நீட்டி பெருமூச்சுடன்
கொத்தக் காத்திருக்கிறதென!!


2.

இம்மியளவு கூட
வலியின்றி ஒரு செடியை
வேரோடு பிடுங்கியெறிய
வழியேதும் புலப்படவில்லை

கரங்களோ நடுங்குகின்றன
மண்ணைப் பறிக்க ஆயத்தமாவதற்கு

ஒரு துக்க வீட்டின் கதறலின்
நடுவே மாட்டிக்கொண்ட
சாமானியனின் கையறு நிலை
மென்னியைக் கவ்வுகிறது.

வளர்த்து விட்ட மண்புழுவோ
நெளிந்து தனது இறுதி
பற்றிய சந்தேகத்தில் தவிக்கிறது.

வேரிலிருந்து மாற்றுவதற்குள்
சுருங்கி விட்ட இலைகளுக்கு
என்ன பதில் தரப் போகிறது
காலம்?

மண்ணோ எப்போதும் போல
மண்ணாய் கிடக்கிறது
பதிலின்றி.

சுற்றி இருப்பவை ஏளனப்பூ பூக்கப்
பாவத்தில் உச்சு கொட்டலுடன்

வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையே அல்லாடித் தொங்கிப்போய் கிடக்கிறது
வேரோடு பிடுங்கிய செடி!!


3.
ஆர்ப்பாட்டமின்றி எப்போது
மலர்ந்ததெனத் தெரியாமலே
மலர்ந்து புலரத்துவங்கியிருந்த ஒன்றில்
எல்லா பிரமிப்புகளும் நீங்கிய பிறகும்
ஒரு துளியென நம்மைச் சேமித்து நகரும்
பெருவெளியின் கணக்கிற்கு
விடை இல்லாத கேள்வியின் சுவாரசியமாய்
எப்போது வேண்டுமானாலும்
உடை படுகையில் நாசி ஏந்திக் கொள்ளும்
மகரந்த துகள்களின் சுகந்தத்தின்
அருகாமையில்
இனியொரு முறை நிகழ
முடியாதவொன்றாய்
திறக்கட்டும் நம் ஆதிக்கோலம்!!


 

4.

பூக்களின் வாசனையில்
மயங்கி சுகந்தமாய் இருந்தவளுக்கு
அத்துவானக் காட்டின்
அந்தகார இருளில் யாருமற்ற தனிமையில் தள்ளிவிட்டபிறகுதான்
மின்மினிப் பூச்சிகள் ஏதேனும்
தென்படுகிறதா எனத் துழாவ
ஆரம்பிக்கிறேன்…

கொடும்பசி கொண்ட மிருகத்தின் முன்
முழந்தாளிட்டு கைக்கட்டி வாய் கட்டி
நிற்கையில் தான்
இருத்தலுக்கும், பிழைத்தலுக்குமான
என் தீவிரம் துவங்க ஆரம்பிக்கிறது…

என் ஓலங்கள் அடங்கிப் போயிருந்தன
என் மூச்சுக் காற்று முழுவதும் ஒரு ஆசுவாசம் நிரம்பி இருந்தது.
எனக்குள் நிரம்பிய தீ ஜுவாலை மட்டும்
கவனமாய் யாருமறியாமல் கனன்று கொண்டே இருந்தது..

வெளிச்சத்தின் மீதான என் காதலென்பது
எவ்வளவு ஆழம் என்பதைக் கண்டுணர வைத்த மின்மினி
காணவியலா அந்தகார அத்துவானக் காட்டிற்கும்,
கொடும்பசி கொண்ட மிருகத்திற்கும்
பெருநன்றி!!


5.  “காலடித்தடங்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து

வளரக் கடவதாக!!

பற்றுதலுக்கான
அத்தனை சாத்தியங்களும்
நிறைந்திருந்த ஒரு நன்னாளில்
என் வீட்டின் கம்பிகளில்
படர்ந்திருந்தது அந்தக் கொடி…

மேல் வீட்டுக் குடியிருப்பின்
புலம்பெயர்தலில்
எப்படியோ அதை மறந்து
விட்டுப் போயிருக்க வேண்டும்…

பழைய உறவுகளைப்
பிரியவும் முடியாமல்
புதிய உறவுகளை ஏற்கவும்
முடியாததொரு தவிப்பை அது
தனக்குள் வைத்துக்
கொண்டிருந்தது…

நான்
வெளி வருகையில் எல்லாம்
மிக லேசானதொரு
அசைவைக் காண்பித்து
என்னுடன் பேசவே
எதிர் பார்த்து நின்றது…

துன்பம் துவள்கையில்
தோள் பிடித்து
நலம் விசாரித்த உடன்
அத்தனையும் கொட்டிவிடத் துடிக்கும்
ஒரு தோழி போல அது என்னை நினைத்து இருக்க வேண்டும்…

மெல்ல வருடி
மெதுவாய் கதைகள் பேசியபின்
மனு ஒன்றை மிருதுவாய்
என்னிடம் வைத்தது…
‘என்னைக் கொஞ்சம் மேலே ஏற்றிவிடேன்!’

கச்சிதமாய் கம்பு நட்டுக்
கரையேற்றி அதன்
கவலை தீர்ப்பதே இன்றென்
முதற் கடமையாகும்.

அது இன்னும்
மேல் நோக்கி வளரக்
கடவதாக!!


Art Courtesy : HypeSheriff 

About the author

சுபி

சுபி

சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி; வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரின் எழுத்தாக்கத்தில் காலடித் தடங்கள் , தேம்பூங்கட்டி, தோமென் நெஞ்சே ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website