1.இரு பால்வீதிகள் சந்திக்கும் புள்ளி
எதற்கிந்த சந்திப்பு
இருவருக்கும் இடையே
சில நூறு பால்வீதிகள்
சின்னஞ்சிறு எரிகற்கள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கான துக்கம்
எதனை அளக்க இந்தப் பதட்டம்
எதற்கான தேம்பல்
எதை ஈடுசெய்ய இந்தப் போராட்டம்
எதுவும் மாறாது
எதுவும் நிலைக்காது
பழங்காலத்தின் கத்தியால் ஆக்கிக்கொண்ட
தழும்புகளை
ஏன் வருட வேண்டும்?
இறப்புகளைச் சிலமுறை சந்தித்தபின்
எதற்கிந்த உற்சாகம்.
உனக்கும் எனக்கும்
தேவையாயிருக்கும்
கண்களின் சந்திப்பு.
தொலைத்த
அதே கண்களை
மீண்டும் காண விரும்பும்
புகையும் நறுமணங்களில் மனம்.
எல்லாம்
எல்லாம்
உயிர் பிரியும் தருணமொன்றின்
விடுபடலுக்காகத்தானே?
2. ததும்புதலின் பெயர்சூட்டு விழா
உன்னில் ததும்பும் எதில்
கரையக் காத்திருக்கின்றன நம் கணங்கள்?
நிகரில்லாத அன்பின் முன்
சொற்கள் வெறும் ஒலிக்கூட்டங்கள்.
மரக்கிளைகளில்
சீரற்ற இடைவெளிகளில்
அமர்ந்து கண்ணுறும்
பறவைகளாய்
நாம் அமர்ந்திருக்கிறோம்.
நம்மிடையேயிருக்கும் மேசையோ
அதிசயத்துக்கிடக்கிறது
நாம் அசைவற்றுக் காத்திருக்கிறோம்.
சம்பிரதாய உரையாடல்களில்
ததும்பும் ஒன்றிற்கு இப்போது
பெயரிட்டாக வேண்டும்.
காப்பிக் கோப்பைகள் ஆறிக்கொண்டிருக்கின்றன.
கடைசியாய்க் கிளம்புகையில்
மேசையும் வெற்றுக்கோப்பைகளும்
நம்மை அழைக்கின்றன
இன்னும் ஏதும் உண்டிருக்கலாமோ?
3. அலை கலைக்கும் சித்திரம்
தேவை இப்போது
நுரை பொங்கும் அலையுடைய
பெருங்கடல்.
இதயத்தை மணலில் புரட்டாது
நனைத்துத் திரும்பிட
எழும் தூய நீல நீரலை.
உறங்குவதன் பாவனையில்
கால்களை மணலில் புதைக்கும்
நிலம்.
இறால்க்குட்டிகள் கால்விரல்கள் கவ்வ
உதறும் கணத்தில்
கலைந்துபோகின்றன
உன் கைபற்றிய விரல்களும்
அந்தி வானத்தில் அரங்கேறிய
மொத்தக் கனவும்.
4. கண்ணுறுகையில் நிகழ்பவை
சாயலில் தெரிபவை
நீயாகவே இருக்கிறாய்
அல்லது
உன் சாயல்களில்தான்
நிகழ்கின்றன சில அற்புதங்கள்
முகங்களில் பிரகாசிக்கும் உன்னை
கண்டடைகின்றன எனது துயரங்கள்.
பின் எப்பொழுதும்
அவை
துயரங்களாய் மட்டுமே
இருப்பதில்லை.