1 சிடுக்குத் திரைகள்
நமக்கிடையே நடத்தப்படாத நாடகங்கள்
இன்னும் மிச்சம் இருக்கின்றன.
அல்லது வாழப்படாத வாழ்வு
மிச்சம் இருக்கிறது.
அந்த நாடகத்தில் நாம் எப்போது
வாழப்போகிறோம்
அல்லது அந்த வாழ்க்கையை எப்போது
இந்த நாடக மேடைக்கு கொண்டுவரப்போகிறோம்.
நம் வாழ்க்கைக்கிடையே
தொங்கும் இந்த பாவனைத் திரைகளின்
சிடுக்குகளை அறிந்துகொண்டுவிட்டால்
மாயத்தின் அற்புத நாடகங்களை
நாம் ரசிக்கத் துவங்கலாம் அல்லவா?
என்ன சொல்கிறாய்?
-
2 அடைப்பு
நான் இங்கேதான் தேங்கியிருக்கிறேன்
என்னை அடைத்துக் கொண்டிருப்பது எது
அறியமுடியவில்லை
அது ஒரு கரிய கண்டுபிடிக்க முடியாத
பொருள் போல உள்ளது
அதை நான் குத்திக் கிளறுகிறேன் துளைக்கிறேன்
ஆனாலும் அது வெற்றிகரமாக என்னை
அடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
பெருமழைநாளில் பழையவை எல்லாம்
நகரத்துவங்கின
அடைப்பு இயல்பாய் தகர்ந்து
நான் மெல்ல நகர ஆரம்பித்தேன்
அப்போது சில இடங்களில்
பழைய அடைப்புகள் தகர்ந்து
புதிய அடைப்புகளுடன்
நீர்த்தேக்கங்கள் கண்ணில் படுகின்றன.
3 ஓய்வு
வாழ்க்கையில் இருந்து கசப்பு
என் நாவுக்கு ஏறி வருகிறது தாங்க முடியவில்லை
என் நாவை துண்டித்துக் கொள்கிறேன்.
என் கால்களை துண்டித்துத்தான்
அவற்றுக்கு ஓய்வளிக்கிறேன்
என் கைகளை துண்டித்துக்கொண்டு
சண்டையில் இருந்து விலகுகிறேன்
தலையை துண்டித்து வைத்துவிட்டு
தூங்குகிறேன்.
4 நான்களால் தவறவிடப்பட்டவைகள்
நான் எல்லாவற்றையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறேன்
அதற்காக வருந்துகிறேன் புலம்புகிறேன்
ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன்
புலன்களை கூர்மையாக்குகிறேன்
ஆனாலும் எல்லாவற்றையும்
தவறவிட்டுக்கொண்டே இருக்கிறேன்
என்னையே நான் பிடித்துக் கொள்ள முடியாத
நிலையில் இருக்கிறேன்
என்னை நான் கைநழுவிவிட தயாராகிறேன்
என் பிடிகள் தளர்கின்றன
அப்போதுதான் கவனிக்கிறேன்
நான் எதையும் தவறவிடவில்லை
எல்லாவற்றையும் விலக்கிக்
கொண்டுதான் இருந்திருக்கிறேன்.
5 ஒரு கிடாயை வெற்றிகரமாக வளர்த்தல்
எதற்கும் ஆசைப்படக் கூடாது என்ற ஆசை
வளர்ந்துகொண்டே வருகிறது.
நான் எல்லாவற்றையும் உதறுகிறேன்.
ஆசைப்படாத ஆசை கிடாயைப் போல வளர்ந்துவிட்டது
அது என் ஆசைகளை முட்டித் தள்ளுகிறது
நினைவுகள் அவ்வளவு சுமையாக இருக்கிறது
அவற்றை நீக்கிவிட முயல்கிறேன்
அப்படி எதுவும் நிகழ்வதில்லை
நினைவுகள் நினைவுகள் தான்
நான் ஒரு பாத்திரம் போல அவற்றை
ஏந்திக் கொண்டிருக்கிறேன்
கிடாய் அந்தப் பாத்திரத்தில்
சிக்கிக் கொண்டுவிட்டது.
அதன் கொம்புகள் வளைந்து சுருண்டுவிட்டன
அதன் மூச்சுக்காற்று
பாத்திரத்திற்குள்
ஒரு தென்றலைப் போல சுழல்கிறது
அவ்வளவுதான்.