cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 3 கவிதைகள்

ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்


1. மா

காயாய் இருக்கும் போது
பச்சையும் புளிப்புமாய்
பழமாகப் பழுத்த பின்
மஞ்சளும் இனிப்புமாய்
தாடையில் சாறு வழிய உண்ணும் போது
கோடையை அழகாக்கும் மாம்பழங்கள்

கிளிமூக்கு
பஞ்சவர்ணம்
சப்பட்டை என்று மாம்பழத்தில்
நிறைய வகையறாக்கள்

இதில் கிளிமூக்கு என்ற பெயர்
மாங்காய் கிளி போல்
பச்சை நிறத்தில் இருக்கும் போது தான்
பொருந்தும் என்பது
தங்கை நன்முல்லையின் வாதம்

தொகையறாவாய்
காற்றுக்கு விழுந்த மாங்காய்களை
ஒளி புகாத இருட்டில்
தன் பசுவிற்கு போடும்
வைக்கோலைப் பரப்பி
பழுக்க வைப்பவன் விவசாயி
மாறாக
கார்பைடு கல் வைத்துப்
பழுக்க வைப்பவனே கார்ப்பரேட்.


2. மருதோன்றி

மருதோன்றி மைலாஞ்சி
மயிலாஞ்சி மருதாணி

பசியத்தை சிகப்பாகாகும்
மருதாணி வேதியியலில்
உன் விரல்கள் மட்டும் எப்போதும்
அதிக மதிப்பெண்களுடன்
தேர்ச்சி பெற்று விடுகின்றன

பூக்கள் மேல்
அபிலாசை நிறைந்த உலகத்தில்
இலைகளில்
மருதாணிக்கு மட்டும் தான்
மவுசு அதிகம்

அதனால் மனமுடைந்த
மருதாணி பூக்கள்
நெஞ்சில் கனல் சுமக்கின்றன

அவை சுமந்த கனலை
நீ உள்ளங்கைகளில் பிரதிபலிக்கிறாய்
அவ்வளவே.


3. வலைஞி

உன் பாவாடை பூக்களின்
எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையில்
மீன்களைப் பிடிக்காமால் விடுவதில்லை என்று நீ
வலை விரிக்கிறாய்
மீன்களிடம்
மிச்சம் உள்ள சாபங்களின்
தளை அறுக்கிறாய்

ஒவ்வொரு பூவின் மையத்தையும்
வந்து பற்றுகின்றன
வெவ்வேறு மீன்கள்

ஒவ்வொரு மீனையும் நீ
உரிப்பொருளாக்கி
கவிதையின்
கருப்பொருளைச் சமைக்கிறாய்

ஆரல் மீன்கள்
சேற்றில் செந்தாமரையின் பாதத்தைப் போல
ஒளிந்து கொள்கிறது என்கிறாய்

கயல் மீன்கள்
கொடும் பகை கொய்யும் கூர் வேலாய்
ஒளி வீசுகிறது என்கிறாய்

யாமை மீன்களுக்கு
இசை முழக்கம் தரும் தடாரியைப் போல
வீங்கிய முகம் என்கிறாய்

வளைந்திருக்கும் வாளை மீன்கள்
எப்போதும் நீரின் மேற்பரப்பில் தான்
துள்ளும் என்கிறாய்

வரால் மீன்கள்
பனையின் குருத்தைப் போல் நீரைச் சீவித்
தள்ளும் என்கிறாய்

நிலத்தில் வாழ முடியாமையே
மீன்களிடம் மிச்சம் இருந்த சாபம்

நிலத்தில் இராட்டினமாகவும்
நீரில் வலையாகவும் வாழும்
உன் பாவாடையைப் பற்றியதிலிருந்து
மீன்களும் தங்களைத்
தகவமைத்துக் கொண்டு
நிலநீர் வாழிகளாயின.


Courtesy : Painting by Vishalandra Dakur

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website