{௳மி} கவிதைகள்
1)
செத்தும் இரைக் கொத்துகிறது
பறவையின் எலும்புக்கூடு.
குஞ்சுகளைக் காண
வானத்தில் நடக்கையில்
பறவைக்குள்ளிருந்து
மழையாக விழும் தானியங்களை
பதனமாக ஏந்துகின்றன
முள்ளுக்காட்டுத் துணிமணிகள்.
2)
எங்கள் பித்தவிருவு பாதங்களை
பன்னருவாளாக்கி
கட்டுக்கட்டாக சாரநத்தியை அறுக்கிறேன்.
வயக்காட்டுக்காரன்
வந்தால் சொல்வதற்கு
காவலுக்கு நிற்கிறது
படமெடுக்கும் பூச்சி.
*சாரநத்தி – புல்வகை
3)
‘யம்மோவ்…யம்மோவ்
உள்ளங்காலுக்குள்ள
ஏறுன ஈக்கிய எடுத்துவிட வாமோவ்வ்…’
கிழமாகியும் என்னுடம்பை சிறுபிள்ளையாக்கத் துடிக்கிறேன்.
எந்த மருந்துச்சீட்டுக்கும்
துடிப்புக் குணமாகவில்லை.
4)
நட்டநடுக் கத்திரிவெயிலில்
சுத்தமான விஷங்குடித்து
கம்மாக்கரையில் செத்தேன்.
என்னை நினைவுக்கல்லாக்கி
குதிங்காலளவு ஊன்றி
வருடத்தில் ஒருமுறை
கனகாம்பரக் குவியலால் மூழ்கடிப்பர்.
அன்றைக்கு மட்டுந்தான்
துன்னூறைத் தின்றபடி
நிழலில் உறங்குவேன்.
5)
வாழைத்தோப்புக்குள்
இலை அறுப்பதற்கென
சட்டை வைத்துள்ளேன்.
அந்தக் கறச்சட்டையை அணிகையில்
தவுட்டுக்குருவியாக மாறிவிடுவேன்.
கையிலிருக்கும் ஆக்கருவா
சிட்டுக்குருவியாகிவிடும்.
சனமில்லாத் தோப்புக்குள்
ரெண்டுபேரும்
சலிக்க சலிக்க விளையாடுவோம்
மேயுவோம்.