உங்களின் வார்த்தையில் சொல்வதானால்
அவர்கள் ஒன்றிற்கும் ஆகாதவர்கள்
கொஞ்சமே கொஞ்சமாய்த் திருடவோ
கொஞ்சமே கொஞ்சமாய் பொய்சொல்லவோ
கொஞ்சமே கொஞ்சமாய் ஏமாற்றவோ
கொஞ்சமே கொஞ்சமாய் கையூட்டுத் தரவோ பெறவோ
கொஞ்சமே கொஞ்சமாய் கபடதாரியாகவோ
இப்படி இவற்றில்
குற்றத்தின் நறுமணங்களை அறியாதவர்களை
ஒன்றுக்கும் ஆகாதவர்களென
உங்களின் உலகம் உதாசீனம் செய்துவிடுகிறது எளிதாக
நிராகரிப்பின் பெருவலியில்
அவர்களின் உலகம் சுருங்கிவருகிறது
அருகிவரும் உயிரினங்களாய்
எஞ்சியிருக்கும் கோமாளிகளாய்
சபிக்கப்பட்டுள்ளார்கள் இந்நூற்றாண்டில்
கையாலாகாதவர்கள் எனும் சமாதானப்
போர்வையைப் போர்த்திவிடுதல் எளிதுதான்.