cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்


பிரவாகமாய்
நனைத்து நகர்கிறது வெயில்
ஊர்ந்து கடக்கிற அதன் முதுகில்
விரல்கள் குவித்து
மெல்ல வருடிப் பார்த்தேன்
நக நுனிகள் பொசுங்க
குழப்ப ரேகைகள் குளிர
கம்பீரமற்ற சிறு அணிலாய்
உடல் சிலிர்க்க பதறிக் குதித்தது
நம்பிக்கையின்றி கை உதற
பாதரசக் குண்டுகளாய்
உருண்டு தகித்த வெப்பத்தில்
வழுக்கிச் சுருண்டது
பம்மிப் பம்மி நீள்கிற நிழல்

இறுக்கத்துடன் அலைகிற
மேக முகம்
மாறிக் கொண்டே இருக்க
ஒரு தொடலில்
பொழியப் போகிறதற்கு
வீம்பென்ன
வைராக்கியமென்ன?
உரசி நகரும் எள்ளல் உடைக்க
பொருமி வீழ்வது
பித்தின் பேரவஸ்தை..

யுகங்களின் சுழற்சியில்
நீயும் நானுமென
மாறிப் போனதும்
யதார்த்தத்தின்
நிமித்தங்களில் ஒன்றே
முகம் சுணங்காது
உன்னைக் கடப்பதென்பது
நிகழ்ந்து விட்டது
கடந்ததை நினையாதிருக்கும்
பொருட்டிலேயே
இம் மீள் தவம்…

மேய்ப்பனின் மந்தையினின்று
விலக வைப்பது எதுவோ
தேவனின் வடிவில்
நடத்திச் செல்வதும் அதுவே
சரண் புகுதலின் எல்லைகள்
என்றென்றும்
சர்ச்சைக்குரியவையென
முள்வேலிகள் தாண்டுகிற
வெள்ளாடுகளின் மூளைக்கென்னவோ
உறைப்பதேயில்லை…

எல்லாமே கனவு போலிருக்கிறது
எனப் பிதற்றியதும்
கனவாகிப் போயிருந்தால்
அதிகாலைகள்
சுபமாகியிருக்கும்
நேற்றைய மழைத் துளிகள்
நாளைய தேவைகளுக்காக
தேக்கப் படுவது
தொலைநோக்கெனலாம்
நினைவுகளை சேமிப்பது
முடக்குவாதத்திற்கான
முதல் அறிகுறி

துர்ச்சொப்பனங்களுக்கும்
சொப்பனங்களுக்கும்
அப்படியொன்றும்
ஒற்றுமைகளில்லை
ஒன்று முடியவும்
மற்றோன்று
முடியாதிருக்கவும்
சூழும் பதட்டம்
தொற்றுவதைத் தவிர
வேற்றுமைகளும் இல்லை


கவிதைகள் வாசித்த குரல்:
ரத்னா வெங்கட்
Listen On Spotify :

About the author

ரத்னா வெங்கட்

ரத்னா வெங்கட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website