- காண்பதான நிலையாமைகள்.
உருவாகிய காட்டில்
ஒதுங்கிய
ஓநாய்கள்
வெறுப்பு விதைகளை
வீசியபடியே உள்ளது
முளை விட்டுத் துளிர்க்க.
தளிர் கூடிய பொய்யில்
நிழல் ஒதுங்கும் தருணம்
கபளீகரம் செய்கிறது
புராண வெறுப்போடு
சந்தேகிக்க முடியாத படியாக
எப்பொழுதும்.
பசுமைகள் யாவும்
நிறமொத்துப்போனதால்
பிரித்தறிய முடியாத
பெருந்துயரில்
அங்கதமெனவானார்கள்
நிச்சலனப் பாடுகளில்.
செழித்து வளர்ந்த காட்டின்
சிதிலப்பாடுகள் கவனம் பெறவில்லை
சிகிச்சை உபாயங்கள்
செழுமை கூட்ட நிற்பதான கூப்பாடுகளில்.
அகவய பற்றல் போதும்
சுயாதீன தழலில்
காடழிந்து
காவந்தாகவென காத்திருக்கிறது
பூமி
அறிவியல் உச்சந்தொடும்பொழுதும்
மடமையில் மகோன்னதம் காணுவதைப் பார்த்து
இயல்பெனச் சுழன்று.
- அயலகத்தில் காத்த அறமும் அஞ்சறைப்பெட்டிகள் பூசிக்கொண்ட அரிதாரமும்.
அடகுக் கடைகளான
அடுக்கு மாடி வீடுகளில்
மனிதர்களை மீட்க முடியாமல்
முழுகிப்போனது
நாகரீக ஏற்பாடாக
எப்பொழுதும்.
குளிர் சாதனப் பெட்டிகள்
குத்தகை எடுத்துக்கொண்டது
தீண்டாத தென்றல்
திசைகள் மாறுவதாக
சாளரங்களைச் சாத்தியதால்.
பாட்டிகள்
பீடாவுக்கு பழகினார்கள்
பிறழ் நவீனத்தில்
பீட்சாவை திண்ணக்கொடுத்த
பேரன்களால்.
பண்டிகைகள் வந்து போயின
பாசப்பிணைப்புகளற்று
செயற்கை நுண்ணறிவில்
செழிப்பான கொண்டாட்டமாக
சுவையற்று.
கம்பங்கூழ் வண்டிகளை
காலை நேரங்களில்
காண முடிந்தது
உடல் உழைப்பாளிகளுக்கு
ஏதுவாக
நகரங்களின்
நான்கு திசைகளிலும்
அடுமனை ருசிக்கு
அடிமையானாலும்
ஆறுதலாக.
தூக்கிச் சுமந்த
கிராமத்தை
தொலைக்காமல்
தூரத் தேசத்தில்
வயதையழித்து
வாங்கிய வசதியை
வந்தும் வாழமுடியவில்லை
புது அரிதாரம்
யாவும்
பூசி நிற்பதால்.
ஆசுவாசப் படுத்த முடியாத
அபயக்குரலை
அடக்க
மீதமிருக்கும்
வாலிபத்தையும்
கொன்றழித்துவிட்டு
வந்து விடுகின்றேன்
மீண்டுமொரு
அயலகப்பணி சென்று
அஞ்சறைப்பெட்டிகளில்
எதுவிட்டு
நிரப்பினாலும்
ஏற்பதற்கு
நீங்களறுந்திய பானத்தை
நானும் பருகிப்பழகி.
- நீர்ம மெய்கள்.
நுண் திரையின்
வாதை
அருகாமையிலும்
தூரப்பாடுகளை
நிகழ்த்துகிறது.
கொட்டிய வார்த்தைகளை
கிண்டிக் கிறுக்காக
மாற்றுமுன்
அறியாமை அனலால்.
சந்தர்ப்ப ஓநாய்கள்
சடுகுடு ஆட்டத்தைத் தொடங்கியது
சைத்தான்களின் கதைகளை
கவனத்தில் கொள்ளாமல்
நீ போனதால்.
எப்போதைக்குமான
மௌனத்தில்
திளைத்தவென்
சாசுவத பொழுதுகள்
பிறகானவொரு
நாளுக்காக
பயணிக்கிறது
கட்டியணைக்கும்
சாத்தியங்கள்
மேவ
கொன்றழிக்கும் நெருப்பைவிட
குளிர்வித்துவிடும்
நீராண்மையை
நிகர் செய்ய
முடியாதென அறிவதால்.