cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

அப்துல்லாஹ்.. ஈதுப் பெருநாளை யாருடன் கொண்டாடப் போகிறாய்


ரமழானின் முதல் பிறையை
வாப்பாவின் கழுத்தில் மிதக்கும்
ரத்தக்கோடாக பார்க்கிறேன்
கண்களில் விழுந்த சாம்பலைக் கழுவ
தண்ணீரில்லை
கண்ணீர் உறைந்து உப்புக்கல்லாக வடிகிறது

என் தேசம்
களவு போய்க்கொண்டிருக்கையில்

பேரீச்சை மட்டையினால் வேய்ந்திருந்த
சிறு வீட்டினருகே
மிஷ்வாக் குச்சிகள் விற்று வந்த
உபைது நானாவின் மையத்து உடலைப் பாருங்கள்
பொத்தலிடப்பட்ட சல்லிக்கரண்டியாக கிடக்கிறது

என் மண்
வன்புணரப்படுகையில்

இடிபாடுகளின் உள்ளிருந்து பிடுங்கியெடுக்கப்படும்
செங்கற்களாக எங்கள் உடல்களை ஆக்கிவிட்டார்கள்
இதற்காகவா
எம் அன்னையர்கள் பாலூட்டி போகித்தார்கள்

என் புன்னகை
சிதைக்கப்படுகையில்

வெள்ளைத் துணியால் சுருட்டப்பட்ட
முஸ்தஃபாவின் உடலை
ஹனீஃபா சாச்சா தர மறுக்கிறார்
அவனுடைய கிழிந்த பஞ்சு பொம்மையுடன்
குழிக்குள் வைக்கப்படுகிறான்

என் பால்யம்
பிடுங்கப்படுகையில்

அப்துல்லாஹ்
தனது மொத்த உறவுகளையும்
மண்ணுக்குள் புதைத்த பிறகும்
நோன்பிருப்பவர்களுக்காகத் தண்ணீர் சுமக்கிறான்
சுடும் மணலில் மண்டியிட்டு கைகளை ஏந்தி
உலக அமைதிக்காகப் பிரார்த்திக்கிறான்
அவன் பின்மண்டையில் இரத்தம் கசிந்து
முதுகில் கோடிடுகிறது

என் சகோதரன்
கொல்லப்படுகையில்

தழ்ஹா தனது பெயர்ந்த மூட்டுகளைக் காட்டி
இறைவனிடம் சென்று
எங்களைத் தாக்கியவர்கள் குறித்து
கேள்வி கேட்கப் போவதாகச் சொல்கிறான்
எப்போதும் உருட்டிக்கொண்டிருந்த
தஸ்பீஹ் மணியை எனக்கென தருகிறான்

என் விளை நிலங்கள்
எரிக்கப்படுகையில்

எங்களை எங்காவது போகச் சொல்கிறார்கள்
கரையில் விழுந்த மீனாக
உம்மம்மா துடிக்கிறாள்

சுலைஹாவின் பருத்த வயிற்றிலிருந்து
பெண் குழந்தை வருமெனச் சொன்னவள்
சதைத் துணுக்குகளைக் கழுவித் துடைத்தாள்
அதில் எது சுலைஹா
எது பெண் குழந்தை

என் தோழிகளின் சிவந்த தோல்கள்
தோலுரிக்கப்பட்டு மரிக்கையில்

நஸ்ரினுக்கு விக்கல் நிற்கவில்லை
அவள் தொண்டைக்குழாய் உடைந்து விட்டதாக
சொல்கிறார்கள்
என் கைகளை இறுக்கப் பற்றியிருக்கிறாள்
அவளுக்காக நான் கலிமா சொல்வேனென நம்புகிறாள்

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்

நான் அவனுக்கும் சேர்த்து சொன்னேன்.


காஸாவிலிருந்து பாலைவன லாந்தர்.
கவிதைகள் வாசித்த குரல்:
பாலைவன லாந்தர்
Listen On Spotify :

About the author

பாலைவன லாந்தர்

பாலைவன லாந்தர்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறப்பிடமாக கொண்ட கவிஞர் பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

2010 -ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

இதுவரை வெளியான கவிதைத் தொகுப்புகள் :
உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள் (2016, சால்ட் பதிப்பகம்), லாடம் (2018, டிஸ்கவரி புக் பேலஸ்), ஓநாய் (2021, யாவரும் பதிப்பகம்).

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website