-
திரும்பாதே..
விடாப்பிடியாக சொல்லிக்கொண்டே இருந்ததை
எதுவும் செய்வதாக இல்லை
யோசனையொன்றை கேட்பதைப் போல கேட்கத் தோன்றுமோ
அதிலுள்ள முக்கியத்துவத்தின் சாயலை
அறை முழுவதும் தேடிப் பார்த்துவிட்டேன்
உன்னுடைய இன்மையை
என்னிடம் கைமாற்றிவிட்டு மேலும் உனக்கென்ன வேடிக்கை
அந்தியின் நிழலென தொங்கும் வௌவாலையொத்த நிறத்தின்மீது
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பறந்துகொண்டிருக்கிறதே
அவையத்தனையும் உன் வார்த்தைகள்
நீங்குதல் பொருட்டு
இன்னமும் விழுந்திடாத சிக்னல் வண்ணங்களை
கனவு காண்கிறேனா
நெவர்
இன்னொருமுறை காலிங் பெல்லை அழுத்தலாம்
என்கிற
பிடிவாதத்தின் கட்டைவிரலை நறுக்கிடவே
தேடுகிறேன்
வேறொரு கூர்மையை
-
வேர் முடிச்சு
ஆழ்ந்த மௌனத்திற்குள்ளே பிடிமானங்களற்று
தவிக்கும்போது
வேறெங்கோ தூக்கிச் செல்ல
வேறெங்கோவிலிருந்து
யாரோ வருவார்
ஏதோவொரு தருணத்தின் சிறிய நுணுக்கத்திலிருந்து
கொஞ்சமாக பிய்த்து எடுத்து போகும்போது
துக்கம் ஒன்றுமில்லை
பரவசம் ஏதுமில்லை
முன்னெப்போதோ ஈர்த்திருந்த பதத்தினால்
சிறு தொடுகையில் நிகழா அர்த்தம் கூட
இப்போது விரிகிறது
வியாபிக்கிறது
இனியெப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்கிற
இன்றைய
ஏற்பாட்டின் சொல்லாடல்கள் கொண்டிருக்கவில்லை
உணர்வின் ஆழத்தில் கசியத் தொடங்கியிருக்கும்
நாளைய அர்த்தத்தை
-
பட்டாம்பூச்சிகள் பறந்தாக வேண்டும்
நீல நிறத்தில் படியிலிறங்கி போகிறேன்
கனவு கலைகிற முனை வரையிலுமே
வெளிச்சம் திரும்பவில்லை
கைப்பற்றியபடி அடையாளங்களைச் சுட்டிக்கொண்டே
திரிந்த பாதைகள் தோறும்
மேடிட்டிருக்கின்றன தயக்கத்தின் பாலங்கள்
வீசும் காற்றின் போக்கோடு நைந்து கிடப்பதில்
பிசகு இல்லை
நடு யாம இசையிலிருந்து நழுவவிட்ட குறிப்புகளை
கொஞ்சமாக வெயில் பூசிய நீல நிறத்திலும்
பாய்மரம் இசைந்திடும் உப்பு நட்சத்திரத்திலுமாக
வேறோர் உலகினுள்
சூல் கொள்ளச் செய்கிறேன்
நீ
வரும்போது
உன்னோடு ஒரு துளியை மட்டுமல்ல
சிறு வனத்தையும் கொண்டு வா
-
நீயல்ல..
சாலையின் இரு மருங்கிலும்
நான் நிற்கிறேன்
ஒரே சமயத்தில் உடைப்பட்ட இரண்டு நானை
எத்திசை நோக்கி செலுத்துவது
தெரியவில்லை
ஏனோதானோவென்று எதிர்ப்படுகிற நொடிப் பொழுதில்
கரம்பற்றி அணைத்துக்கொள்ளும்
காரணங்கள் கைவசமில்லை
உள்முகமாக சிதைந்து மீளும் மயக்கங் குறித்து
ஞாபகங்கள் திரள்வதில்லை
ஒரு நான்
வேறொரு நானாக உணரப்பட வழியற்று
தொலைவுகள் தூர்ந்து போகின்றன
சாலையின் இருமருங்கிலும் நிற்கிறோம்
துணையற்ற தயவில் மாற்றுப் புள்ளியென
நெடுங்காலமாய்