ஏதோ ஒரு விசேஷம்
ஏதோ ஒரு துக்கம்
ஏதோ ஒரு சந்திப்பு
ஏதோ ஒரு புறக்கணிப்பு
ஒரு மகிழ்ச்சி
ஒரு துயரம்
ஒரு அன்பு
ஒரு துரோகம்
ஒரு தெளிவு
ஒரு குழப்பம்
ஒரு பாஸ் மார்க்
ஒரு ஃபெயில் மார்க்
எதோ ஒன்று
எதிரில் அமர்ந்து
சியர்ஸ் சொல்கிறது
எதுவுமே இல்லாத போது;
புது ஜட்டி வாங்கியதற்காக
ஒரு சியர்ஸ் சொல்லப்படுகிறது.
யாரோ யாருடனோ ஓடிப்போனதற்காக
இன்னொரு சியர்ஸ் சொல்லப்படுகிறது..
பிறக்கையில்
ஒரு சியர்ஸ் சொல்லப்பட்டது
இறக்கையில்
ஒரு சியர்ஸ் சொல்லப்படும்.
இந்த சியர்ஸ்
நண்பனிடம் சொல்லப்பட்டது
முதலாளியிடம் சொல்லப்பட்டது
தொழிலாளியிடம் சொல்லப்பட்டது
ஆசானிடம் சொல்லப்பட்டது
மாணவனிடம் சொல்லப்பட்டது
அண்ணனிடம் சொல்லப்பட்டது
அப்பாவிடம் சொல்லப்பட்டது
மனைவியிடம் சொல்லப்பட்டது
எதிரியிடம் கூட சொல்லப்பட்டது
இன்று
அக்கா மகளிடம் வந்து நிற்கிறது.
எந்த சியர்ஸ் அமுதென்பதும்
எந்த சியர்ஸ் விஷமென்பதும்
அதற்குக் கற்பிக்கப்படும்
முழு நீளக் காரணத்தில்தான் இருக்கிறது.
ஒரு நல்ல குடிமகனுக்குக்
குடிக்க வேண்டும் என்பதைத் தவிர
வேறெந்த சப்பக் காரணங்களும் இல்லை
அவன்
அத்தனை அசால்ட்டாக
நாட்டின் பொருளாதாரத்தின் முன்
சியர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
ஆதலால்
ஒவ்வொரு குடிமக்களும்
நல்ல குடிமகன்களிடம்
தரம் தாழ்த்துவதை விட்டுவிட்டு
சிரம் தாழ்த்தி ஒரு சியர்ஸ் சொல்லலாம்.
Courtesy : Painting By Malak Hani