cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

பா.சரவணன் கவிதைகள்


  • புதிய வனவாசப் பதிகம்

சிந்து கூந்தலை வளர்க்கிறாள்
நீளமாக
அடர்த்தியாக
வலுவாக

கூந்தலை
பால்கனியிலிருந்து
கீழே போடும் ஒவ்வொருமுறையும்
சாத்தான்கள் மட்டுமே அனுப்பி வைக்கிறாள்
சூனியக்காரி பாட்டி

காலம் போன காலத்தில்
பப்ஜி விளையாடும் பாட்டி
தேடிவரும் அரச குமாரன்கள் அனைவரையும் சுட்டுக் கொலை செய்கிறாள்
தாத்தன் அப்பன் சித்தப்பன் பேரன்
துணையோடு

அவ்வப்போது சிந்துவின் தலைமுடியை
சிக்கெடுக்கும் சாக்கில்
சோதித்துப் பார்க்கிறாள்
சதிகாரக் கிழவி
அதற்குள்
புளூடூத் எதையும் ஒளித்து வைத்திருக்கிறாளா என்று

கல்லூரிக்கு செல்லும்போது கூட
மறக்காமல்
ஜிபிஎஸ் டிராக்கரை
பிராவில் பொருத்தி அனுப்புகிறாள்
கடமை தவறாத அன்னை

சைக்ளோபாமின் திறனையும் மீறி
வலிமிகும் மாதவிடாய் நாட்களில்
அன்பும் அறனும் பண்பும் பலமும் கொண்ட
அரச குமாரன் ஒருவன்
பதினெட்டு அடி உயர
குதிரையில் வந்து
தன்னை மீட்டுச் செல்வதாய்
மாயக் கனவு கண்டு
கொடுந்துயர் மறந்து
பறந்து
உறங்கிப் போகும் சிந்து
சிகைக்காய் தேய்த்து தலைகுளித்து
வெட்டிவேரும் வேறு பல மூலிகைகளும் போட்டு
மணம் கமழும்
மூலிகை எண்ணெய் தடவி
கூந்தலின்
கருமை குறையாமலிருக்க
கருவேப்பிலை தொக்கு உண்டு
உடல் சூடேறாமல் இருக்க
திரைநேரத்தைத் தியாகம் செய்து
கூந்தலை
வலுவாக
அடர்த்தியாக
நீளமாக‌ வளர்க்கிறாள்

ஒருநாள்
என்றேனும் ஒருநாள்
அரச குமாரன் நிச்சயம் வருவான்
என்று நம்பி.


  • பாட்டி வளர்க்கும் செடிகள்

சிந்துவின் பாட்டி
ரோஜாச்செடி வளர்க்கிறாள்
தாத்தனுக்கு ரோசாவாசம் பிடிக்குமென்று

மல்லிச்செடி வளர்க்கிறாள்
மாமனை மல்லிப்பூவாசம் மயக்குமென்று

கனகாம்பரச்செடி வளர்க்கிறாள்
அப்பனுக்கு வாசமெல்லாம் அலர்ஜி என்று

கற்றாழைச்செடி வளர்க்கிறாள்
சித்தப்பன் கடியை சீக்கிரம் ஆற்றுமென்று

துளசிச்செடி வளர்க்கிறாள்
ஆச்சாரமான அடுத்தவீட்டுக்காரனுக்குப் பிடிக்குமென்று

கற்பூரவள்ளிச் செடி வளர்க்கிறாள்
முதல்மாடி வாடகைக்காரனுக்கு அடிக்கடி சளி பிடிக்குமென்று

புதினாச்செடி வளர்க்கிறாள்
எதிர்வீட்டுக்காரன் வாய்மணக்க வேண்டுமென்று

அரளிச்செடியும் வளர்க்கிறாள்
பேத்தி உடன்போக்கு போகத் திருவுளம் கொள்ளக்கூட கூடாதென்று .


  • அப்படியே ஆகட்டும்

தீயில் இறங்கச் சொன்னான்
வால்மீகி
மதுரையை எரிக்கச் சொன்னான்
இளங்கோவடிகள்
தலையில் தண்ணீர் ஊற்றினால் போதுமென்றான்
ஜெயகாந்தன்
” டீ சர்ட்டை மாற்றினாலே போதும்னு எழுது மாமா” என்கிறாள் சிந்து.


  • கானலி

(1)
காலையில் நீ வந்தாய்
“ஒழுங்காய் முடுயை வெட்டு
ஷேவ் பண்ணித் தொலையேன்
சாப்டியா”
என்றாய்

மதியம் நீ வந்தாய்
“குளிச்சிட்ட போல
சாப்டா வாய சுத்தமா தொடைக்க மாட்டியா
மேல்பட்டன போடு”
என்றாய்

மாலையிலும் நீ வந்தாய்
“ மதியம் தூங்காதே
தொப்பை பெருத்துக்கிட்டே போகுது
எழுந்து போய் முகத்த கழுவு”
என்றாய்

காலையில் நீ
வந்தாயா…

(2)

தொலைதூரப் பயணத்தில் மனதில் நிறைவது
யார்முகம்
ஆழ்துயிலில் செவிகளில் கேட்பது
யார் குரல்
முதல்மழையில் நனைகையில் உணர்வது
எவரின் தீண்டல்
உயிர்பிரியத் துடிக்கையில் நாசியில் பரவுவது
யாருடைய வாசம்

(3)

உன்னைத்தான் தொட விரும்பி, கைகளை நீட்டினேன்
குறுக்கே கண்ணாடி
இருந்ததை அறியாமல்
திரும்பி
நடந்தேன்
நீ எனைத் தொடரும் பிரம்மையோடு
கைகளில் ரத்தம் சொட்டச் சொட்ட

(4)

என் நெற்றியில்
சந்தனக் குறியை ஒற்றிய முகம்
கிழக்கில் உதிக்கிறது

என் கண்களில்
ஒளியை ஏற்றிய விழிகள்
வானில் உயர்கின்றன

என் மூக்கில்
மணந்து
மோகத்தைக் கூட்டிய கூந்தல்
வானில் சுருண்டு
தீப்பந்தாகிறது

என் உதட்டில்
முத்தமிட்டு
அணுவைத் துளைத்து
ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்த உதடு
சிவந்து எரிந்து
தீப்பந்தின் சிறகாகிறது

என் காதுகளில்
முணுமுணுத்த குரல்
மோகன வெளியாகி
தீப்பந்தை இழுக்கிறது

அத்தீப்பந்து
நெருங்கி
என் மேல் கவிந்து
தோலைத் தீண்டி
சுட்டு
தசையைத் தீண்டி
பொசுக்கி
நரம்பைத் தீண்டி
வெடித்து
எலும்பைத் தீண்டி
உருக்கி
அது
நானாகி
என்னை
அதுவாக்கி
மறைகிறது .


  • ராஜாவும் பிரான் ஃப்ரையும்

ராஜா
இசைக்கோர்வை எழுதுகிறார்
குயில் கூவுகிறது
ரயில் ஓடுகிறது
தென்றல் தீண்டுகிறது
புயல் தாண்டுகிறது
மழை நின்று வெயிலடிக்கிறது
காட்டுத் தீயின் மேல் கனமழை பொழிகிறது
காலமும் கூட
தாளத்துக்குள் தஞ்சம் புகுகிறது
தேவதைகள் பறந்து பறந்து
குலுங்கிக் குதித்தாடுகின்றனர்
அரண்மனையின் வாசலில்
கடவுள்கள் கூட
க்யூவில் நிற்கின்றனர்

ராஜா கவிதை எழுதுகிறார்
உவமை உருள்கிறது
புதுமை புரள்கிறது
தத்துவம் தவழ்கிறது
மகத்துவம் கமழ்கிறது

ராஜா பேருரை ஆற்றுகிறார்
பறவைகள் உறைகின்றன
மலைகள் மறைகின்றன
சிலைகள் சிரிக்கின்றன
விலங்குகள் வியக்கின்றன
நிலையை மறக்கின்றன

ராஜா அணிந்துரை எழுதுகிறார்
புராணங்கள் புரண்டு ஓடுகின்றன
வரலாறுகள் மிரண்டு ஓடுகின்றன
உண்மைகள் உருண்டு ஓடுகின்றன
பன்மைகள் பயந்து ஓடுகின்றன

ராஜாக்கள் கிடக்கட்டும்
விடுங்கள்
அவர்கள் எப்போதுமே அப்படித்தான்
நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா ?
நல்லது
சேலம் அம்மா மெஸ்ஸில்
மீல்ஸ் ஒன்று வாங்கி வாருங்கள்
கூடவே ப்ரான் ஃப்ரை ஒன்றும்.


வாலறுமின் !

பாரதிதான் எனக்கு எல்லாம்
சரி…
கம்பன்தான் எனக்கு எல்லாம்
சரி…
இளையராஜாதான் எனக்கு எல்லாம்
சரி…

சரி சரி…
எல்லாம் சரி,
அவருக்கும் இவருக்கும் நீங்கள் ?


Tautologistடின் ஒலிக்குறிப்புகள்

னக்கு எதுவோ
எனக்கும் அதுவே

எனக்கு எதுவோ
உனக்கும் அதுவே
உனக்கும் எனக்கும்
எதுவோ அதுவே
அதற்கும் எதற்கும்
அதுவும் எதுவோ
எதுவும் அதுவே
எனிலும் எனாவிட்டாலும்
எனக்கு நீ யாரோ
உனக்கு நான் யாரோ
உனக்கும் எனக்கும்
அது எதுவோ
எது அதுவே
அதுவும் எதுவும்
ஒன்றானால்
உனக்கும் உண்டு
எனக்கும் உண்டு
அதுவும் எதுவும்
வேறானால்
எனக்கும் இல்லை
உனக்கும் இல்லை.


Courtesy :

Art : Marco brandão

 

About the author

பா.சரவணன்

பா.சரவணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website