cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

அன்புமணிவேல் கவிதைகள்


1. அன்னலெட்சுமிகள்

பி.டெக். முடித்திருந்த..
திருமணத்திற்குக் காத்திருந்த..
சிவந்த நிறமும்
நீண்ட கூந்தலுமுடைய..
அதிர்ந்து பேசத்தெரியாத
28 வயது அன்னலெட்சுமி
தூக்கில் தொங்கிவிட்டாளாம்.

ஒரு வீட்டை
ஒரு வீதியை
சில உறவுகளை
சில நட்புகளை
அத்தனை பதற்றத்தோடு
உலுக்கி எழுப்பிவிட்ட
ஒரு விடியலின் முகத்தில் தான் இன்றைக்கு நான்
விழித்து வைக்க நேர்ந்தது.

படித்திருந்ததையும்
படிக்கப் போவதையும்
பகிர்ந்து கொண்டபடி
குட் நைட்டோடு முடிந்திருந்த
அன்னத்துடனான முந்தின இரவு
வாட்சப் உரையாடலுக்கும்
ஐஸ்பெட்டிக்குள் பனிப்பூவாக
ஜில்லென்று பூத்திருக்கும் அன்னத்தின் முகத்துக்குமாக
வெறித்தபடி இருக்கிறாள்
அவள் தோழி ஒருத்தி.

அந்த வீடு முழுக்க
அந்த வீதி முழுக்க
வாய்கள் ஓயாது
மனங்கள் ஓயாது
பறை பறை பறையென
பறையடித்துக் கொண்டிருக்கின்றன
ஏன் ஏன் ஏன் என்று
குடைந்தெடுக்கிற
கேள்விகள்.

அத்தனை நம்பிக்கைகளாலும்
கைவிடப்பட்டிருந்த அன்னலெட்சுமிக்கு
ஒரு துப்பட்டா போதுமானதாக
இருந்திருக்கிறது..

அன்னலெட்சுமியால் கைவிடப்பட்ட
அவளின் அத்தனை கேள்விகளும் வீதிக்கு வீதி
வீட்டுக்கு வீடு
அன்னலெட்சுமிகளைத் தேடித்தான் வலசையில் இருக்கின்றனவாம்.

அன்னலெட்சுமிகள் ஜாக்கிரதை.


2. முதலும் கடைசியும்

முதல் முத்தத்தின் தருணம்
யாரிடம் எப்போதுயென்று
நினைவிருக்கிறதா
என்ற கேள்வியொன்று
நண்பர்கள் வட்டத்தில்
திடீரென்று குதித்து வைத்தது.

அதன் நீட்சியில்
கடைசியாகப் பெற்றுக்கொண்ட
முத்தத்தின் பக்கங்களைத் திறப்பதற்கு
முட்டி மோதி நின்றது
இப்போது அந்தக் கேள்வி.

முதலுக்கும் கடைசிக்குமாக
அவரவரும் அவரவரின்
முத்த யாத்திரைக்குள்
சத்தமின்றி முழுகிப் போக…

மொத்த முத்தங்களும்
மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன
இப்போது.

எங்களில் இருந்து விலகியமர்ந்து
பீடியும் கையுமாக
மண்ணைக் கீறிக்கொண்டிருந்தவன்
சொன்னான்..
எனக்குப் பசிக்கிறது என்று.

About the author

அன்பு மணிவேல்

அன்பு மணிவேல்

திருச்சியைச் சார்ந்த அன்பு மணிவேல் மலர் மருத்துவராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன,

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website