cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

தேவசீமா கவிதைகள்


  • மூதூர்

நினைவும் மறதியும் குழம்பிக் குழம்பி
ஒலிக்கும் வாழ்வின் ரேடியோ.

ட்யூன் செய்ய குமிழில்லை அவரிடம்.

இப்போதைய பட்டன்கள் அவரின்
‘மாசிலா உண்மைக் காதலை’ வெட்டி சாய்க்கின்றன.
‘என்னை விட்டு ஒடிப்போக முடியுமா’வை
பின்னி பூச்சூடுகிறது.

‘காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை’
சுழித்தபடி ஓடி சுழலில் தள்ளுகிறது.

அது பேரு ‘லேடியோ இல்ல’ கேரவன் என்கிறான்
எவனோ ஒரு பொடியன்,
சாடை எங்கேயோ எப்போதோ கண்ணாடியில் பார்த்தது போலிருந்தது.

அவருக்கும் தெரியும்
அது லேடியோவோ, காரவனோ இல்லையென்று

அவருக்கு மட்டுமே தெரியும்
இந்த பீ மூத்திர நாற்றமடிக்கும் கட்டிலில் இருந்து
மஞ்சளும் தாழம்பூ குங்கும வாசனையும்
கலந்து வீசும் அவள் மடிக்கும்
மாறி மாறி பயணம் செய்விக்கும்
மாய கால ஊர்தி என்பது.


  • எரிசினம்

மலை எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதன் கடந்த காலம் எதிர் காலமாயிருக்கிறது.
நிகழ் காலம் கடந்த காலமாயிருக்கிறது.
எதிர்காலம் நிகழ் காலமாக.

காலமயக்கமல்ல
இதுவே அதன் உண்மையான ஸ்திரம்.

அதன் ஸ்தூலம் ஒரு நாள் ஓடியபடியே
எரியுமொரு ஸ்தூபியைக் கண்டது.

அய்யோ குளிருதே குளிருதே என்றலறியபடியே
ஸ்தூலம் கரிக்கட்டையாய் மூட்டினில் மடங்கிச் சரிந்தது.

கருகிய முலையில் வாய்பொருத்தி உறிஞ்சிய பிஞ்சு
மலையை லேசாய் மிக லேசாய் அசைத்துப் பார்த்தது

பின்னொரு நாள் குதூகலமாய் பாடியபடி வந்த
திருமண வாகனத்தை கவிழ்த்து
உயிர்ப்பலியிட்டது மலை.

என்னை வேசையென்றவன்
இவளையும் அப்படி அழைக்க
கயிறு கட்டி இழுத்து வந்தான்.

கொன்று நன்று செய்தாய் மாமலையே,

அச்சொல் கேட்டு எரிந்து சாவதை விட
இப்படியே போகட்டும் இவள்.

எரிகொற்றவைக்கு மலை தான் காலம் இப்போது.

மலைக்கு அவள் எரிந்த முலை.


  • காடதன் வெண்மை

உணவு விடுதியின்
தலைமை சமையலரும் நானும்
‘கண்ணாம் பொத்தி’ விளையாடிக் கொண்டிருக்கிறோம்

பெரிதாய் ஒன்றுமில்லை
நாள் தவறாமல்
ஒரே ஒரு இடுபொருளை
வெவ்வேறு வகை
உணவுகளில் ஒளித்து
வைப்பாராம்.

இடுபொருள் ஒரு ‘அல்பினோ’ யானை

நான் கண்டுபிடிக்க
வேண்டுமாம்.

முதல் நாளில்
அன்னாசி பழமிட்டு
வைத்திருந்த மோர்க்குழம்பில் இட்டிருந்தார்.

அடுத்த நாளில்
மோர்க்குழம்பு
மோர்க்குழம்பாகவே இருந்தது.

அப்பாடா, என்று
சாப்பிட்டு ரசத்துக்கு
நகர்ந்த போழ்து சோறிட்டு பிசைந்த பின்னான
ரசம் என்னைக்கண்டு
உதடு சுழித்தது. இன்று அதிலாம்.

அடுத்தடுத்த நாட்களில்
பொரியலும், புளிசேரியும் நானும் சிக்கியிருந்தோம்
அந்த வெள்ளைப் புலியிடம்.

தப்பிப் பிழைத்தது அவியலும், அப்பளமும் மட்டுந்தான்,
எனக்கது சொர்க்கத்து ‘மன்னா’வே தான்.

நானெடுத்த சங்கல்பம் ஒன்றுதான்
அவியலில் அந்த வெண்மர்மக் கிளியின் இறகொன்று தென்படும் நாளில்
அவ்வுணவு விடுதியின் கதவுகள்
எனக்கு மூடப்பட்டதாய் புரிந்து கொள்வேன்.
வெள்ளை விஷத்தை
ஏதாவது ஒன்றிலிட்டு பழகுங்கள் என்ற மன்றாடலுடன்.


 

About the author

தேவசீமா

தேவசீமா

குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website