-
இரவு பகல்
என் உயரம் காரணமாக
நான் கூட்டத்தில் தனியாகத் தெரிவதில்லை
ஆனாலும் இருளில் இருந்து பேசும் என் குரல்
ஒரு விளக்கு போல இருக்கிறது
இருளில் விளக்குக்கு மேல் எதுவுமில்லை.
ஓர் இரவில் உங்களிடம் சொன்னேன்
இந்த வானத்தை எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முடிகிறது
ஒரு நிலவு~
பெயர் தெரிந்த சில விண்மீன்கள்~
மீதி மேகங்கள் ~அதற்குமேல் எதுவுமில்லை
அதிலிருந்து இரண்டு விண்மீன்களைப் பெற்ற
அம்மாவின் உடலில்
மார்புகளுக்கு மேல் எதுவுமில்லை
என்று தூரத்தில் அழுகிறது குழந்தை.
“இதற்கு மேல் எதுவுமில்லை” என்பது
ஒரே நேரத்தில் கதவை மூடவும் திறக்கவும் செய்கிறது
“இதற்கு மேல் எதுவுமில்லை” என்பது
ஒரே நேரத்தில் திகட்டவும் திகைக்கவும் செய்கிறது.
-
தாத்தாவின் செய்தித்தாள்
தாத்தாவுக்கு
காலை உணவுக்குப் பின் தினமும்
நாளிதழ்களில் வரும்
கண்ணீர் அஞ்சலி விளம்பரங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு
பரீட்சைக்கு படிப்பது போல்
மீண்டும் மீண்டும் அவற்றைக் படித்து முடிக்கிறார்
அவரது பெயரின் முன் பகுதியோ பின் பகுதியோ
எழுதப்படவில்லை என்பதை உணரும் போது
ஒரு பெருமூச்சு விடுவார்
கடைசியாக
செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு
அமைதியாக யோசிப்பார்
ஒரு வேப்பம்பூவோ புளியம்பூவோ அல்லது ஒரு பழுத்த இலையோ
அதன் மீது விழுந்ததும்
அவரும் அஞ்சலி செலுத்தியது போல
எழுந்து நடப்பார்.
-
குரல்
என் தலையில் ஒரு சிறிய குரல் இருக்கிறது
அதன் கட்டளையிலிருந்து குறிப்புகளை எடுத்து உச்சரிக்கிறேன்
இந்தக் குரல் கடவுளுக்கோ அல்லது
எந்த அருங்காட்சியகத்திற்கோ சொந்தமானது அல்ல
இது என்னிடம் தவிர உலகில் யாருக்கும் இல்லை
என் குரல் ஒரு செடி போல வளர்கிறது
யாருடைய காதும் அதற்கு நீருற்றுகிறது.
என் குரல் ஒரு தீ போல படர்கிறது
யாருடைய குரலும் காகிதம் போல வந்து எரிதலூட்டுகிறது.
இதயத்திலும் ஒரு சிறிய குரல் இருக்கிறது
அதன் வேண்டுகோளில் இருந்து குறிப்புகளை எடுத்து உச்சரிக்கிறேன்.
இந்த வேண்டுகோள்
பாறைகளுக்கும் மரத்தின் அடிக்கட்டைகளுக்கும் கூட கேட்கக்கூடியது
இது என்னிடம் மட்டுமின்றி
உலகில் யாரிடமும் இருக்கிறது.