அந்த தேநீர் நிமிடங்கள்
இந்த தேநீர் நிமிடங்களை
ஒரு பூப்பறிக்கும் பொழுதுகளாய்
கற்பனை செய்து கொள்கிறேன்.!
செடியை விட்டுப்
பூவைப் பிரித்து எடுப்பதுபோல்
மேல் படர்ந்த ஆடையை
மெல்லப் பிரித்தெடுக்கிறேன்..!
அதன் ஒவ்வொரு மிடறும்
ஒரு மெல்லிய இதழ் உதிர்ந்து
முகம் வருடுவது போல்
நா வருடிச் செல்கிறது..!
அந்த ஒரு தேநீர் கோப்பை
தீரும் வரையிலான நிமிடங்களை
உதிர் பூக்களைக்
கட்டிக்கோர்ப்பது போல்
மிருதுவாக கையாள்கிறேன்..!
தீர்ந்த கோப்பையை
கழுவிக் கவிழ்க்கையிலும்
கட்டிய பூவை பின்னலில்
தொங்க விடுகையிலும்
ஒரு மெல்லிய சாரலின்
சின்னதொரு இனிமை
இதயம் நிறைக்கிறது..!
தேநீரைக் கூட
அமர்ந்து ருசித்து ரசித்து
பருகிட நேரமின்றி சுழல்வோரை
வாழாமல் வாழ்கிறார்கள் பாரென
பூக்களின் காதில் சொல்லிச் சிரிக்கிறேன்..!!!
இசையெனும் பசை
மூளைக்கு வலபக்கமும்
இதயத்துக்கு இடபக்கமும்
ஒலிப்பானை திணித்து இயங்கவிடுகிறேன்..!
நாளொன்றுக்கு ஒருதடவையேனும்
காதுக்குள் ஊற்றி அடைத்துக்கொள்கிறேன்..!
உள்ளே சென்ற நொடி
இசையெல்லாம் இதயம் அடைய
வரியெல்லாம் மூளையுள் நுழைய
வேறு உலகத்துள் உலவச் செல்கிறேன்..!
அதனை தரிசிக்காத நாளெல்லாம்
அத்தனை அலுப்பாய் இருக்கிறது..!
ஒரு கட்டுவீரியனைப் போல்
காட்டுமிராண்டித்தனமாக கொத்திய
எல்லா எண்ணங்களும்
எங்கோ ஒளிந்து நெளிகிறது..!
உணர்வுகள் தந்த குறுகுறுப்பில்
இதயம் குழைந்து கரைகிறது..!
இன்னமும் மூளைக்குள்
பிரித்தறியப்படா வார்த்தைகள்
பத்திரமாய் இருக்கிறது..!
மொழி எனும் எல்லைக்கோட்டை
ரகசியமாய் ரசனை கொண்டு
ஆட்காட்டி விரலால் அழித்துவிடும் அதிசயனாகிறது..!
தெரிந்தோ தெரியாமலோ
சமயத்தில் இசை
உடைந்த மனதை ஒட்டும்
பசையாகிப் போகிறது..!
பங்களா காவல்காரன்
இப்பொழுதெல்லாம் அவனைக் கண்டால்
வாலாட்டாமல் நகர்வதில்லை
அந்தத் தெருநாய்..!!
அந்த ரேடியோவில் வரும்
அத்தனை தொகுப்பாளர்களின் பெயர்களும்
அவனுக்கு அத்துப்படி…!!
அந்த 12 மணி நேரம் மட்டும்
எப்படித்தான் குட்டி போடுமோ..?
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்
பார்த்தாலும் கடிகாரம்
ஐந்து மணித்துளிகளை மட்டுமே
நகர்த்தி வைத்துச் சிரிக்கும்..!!
அதன் டிக் டிக் ஓசையும்
இவன் லப் டப் ஓசைமும்
வெட்டுக்கிளி கரப்பானோடு
சேர்ந்து போட்டியிடும்..!
சமீப காலமாக அப்படித்தான்
தேநீர் குடுவையும்
சன்னல் கம்பியும்
ஒற்றைக் குச்சியும் தான் அவனோடு
ஒற்றுமையாக இருக்கின்றன..!!
அடிக்கடி அவன் தேநீர் குடிப்பதுபோல்
குருதி குடித்துக் கடக்கிறது
அந்த சாலையின் கொசுக்கள்..!
மெல்ல வருடி வருடி
இமை கவிழ்க்கச் செய்யும்
மரத்தடியை அவன் வெறுக்கிறான்..!
தனக்கென கொடுக்கப்பட்ட குட்டிக் கூட்டுக்குள்
புழுவென அடைபோகிறான்..
சூரியன் கிழக்கில் எட்டிப்பார்க்கும்
சுதந்திர நிமிடம் வந்ததும்
பட்டாம்பூச்சியாய் பறக்கிறான்..!
திடீரென கேட்கும்
ஒலிப்பான் ஓசைக்கு
பதறியபடி முழிக்கும் அவன் விழிக்குள்
மொத்தமும் சிவப்புச் சாயம்..!
சூழ்நிலைச் சர்ப்பமாய்
சுருண்டு கிடக்கும் அவனுக்கும்
ஒரு ஆசை இருக்கிறது..!!
ரம்மியமான ஆளரவமற்ற
ரகசியமான இருட்டில்..
மரங்களின் தலைகோதுதலில்…
கையிற்றுக்கட்டிலில்..
தலை குப்புறப்படுத்து
குறட்டை விட்டுத் தூங்கவேண்டும்
அவ்வளவுதான்..!
அவ்வளவேதான்..!!