cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

பின்னி மோசஸ் கவிதைகள்


  • தூண்டில் சிறுமி

மாலையில்
நாவல் மரத்தடியில்
சிறுமியோடு உட்கார்ந்திருக்கும்
சிறுவனின் கண்கள்
குளத்தோடு அலைகிறது
கோபம் தளும்புகிறது

பார் பார்
உனக்கு மீன் பிடிக்கவே தெர்ல
தூண்டில வெளிய எடு
மறுபடி புழுவை கொக்கியில கோர்
எட்ற தூரத்துக்கு எறி
தக்க மேல கண்ணு வச்சுக்கோ
நகருதா? நகரட்டும் விடு
மூழ்குதா? மூழ விடு
இழு.. இழு… சட்டுன்னு இழு…
வெட்டி இழுக்கிறாள் சிறுமி
மீனுக்குப் பதிலாய்
கொக்கியில் மிதந்தாடி வந்தது
புழுவின் இறுதிப் பாதி

இப்ப பார்…
தூண்டிலை அவளிடமிருந்து பிடுங்கி
அதே உத்தியைதான் கையாள்கிறான்
சொடுக்கி வந்து விழுந்த
கொக்கியில் இப்போது
புழுவின் இறுதி ஒச்சம் கூட இல்லை

ரெண்டு பேரும்
ஒண்ணாச் சேர்ந்து பிடிப்பமா?
அவள் கேள்கிறாள்

மனமில்லாமல் ஒத்துக் கொண்டு
புழுவை கோர்த்து
குளத்தில் எறிகிறான்….

தக்கையின் மீது அவளது கண்
இழுவிசை மீது இவனது கண்
இழு என்கிறாள்.. இழுக்கிறான்
துள்ள துள்ள குதித்தாடி
அவளது மடியில் வந்து விழுந்தது
கையளவு அகலம் கொண்ட
பஞ்சலை மீன் ஒன்று

அது துடிக்கிறது
நிலக் காற்றின் சூடறியாத
செதிள்கள் தவிக்கிறது
குளத்தோடு நீந்துகிறது அதன் கண்கள்

இத விட்ரு… வேணாம்…
ஏட்டி செவிள்லயே அடிப்பேன்
அடிச்சிக்கோ… ஆனா விட்ரு
கண்களைப் பார்த்தே கட்டளையிட்டாள்

இறுகிய கோபத்தோடு
அந்த பஞ்சலையை விடுவித்து
குளத்திற்குள் எறிகிறான்
நீரின் காற்றிற்கு இசைப்ப அது
செதிள்களை ஏற்றி இறக்கி
வாலசைத்து குளத்தில் மூழ்குகிறது

நீரில் நீந்திய சிறுவனின் கண்களில்
மென் புன்னகை விரிகிறது
அவனது காதில் செல்லக் கடி வைத்து
தூண்டிலை சுருட்டுகிறாள் சிறுமி.

  • துளிர்த்த இறகு

வனாந்தரத்து பாறையில்
ஒற்றை இறகுகளும்
அற்ற பறவை சுருண்டு கிடந்தது
காடு கருகி கிடந்தது
ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருந்தன
எந்த இடத்தில்
எத்தனை பேர் மடியவோ???
காலம் கடந்து
சில்லென்று விழுந்தது
ஒரு மழை துளி

காட்டின் கடைசி மரத்தின்
இலை துளிர்த்தது.

  • கழுகு

பாதி ஆயுளுக்கு பிறகு
காட்டின் குகையில்
பட்டினியாக தனித்திருந்து
இறகுதிர்த்து
பழைய நகம் பிடுங்கி
முதல் இரை தேடும்
கழுகின் பசி வெறியாக காமம்…

புத்தம் கூரிய அலகில்
துள்ளி துடிக்கிறது
ஒரு எளிய உயிர்..

இரையும் நானே… பசியும் நானே

  • நிலவை இடிக்கும் பொக்லைன்

அந்த பழைய வீட்டை இடித்து
தரை மட்டமாக்க வந்து நின்ற
பொக்லைன் வண்டியின்
துதிக்கை நேராக
மொட்டை மாடிக்கு உயர்ந்தது…
முன்னம் நாள்களில் நானும் அவளும் மடி மீது மடி வைத்து படுத்திருக்கும் இடத்தில்
முதல் ராட்ஷச
எந்திர கை விழுந்தது…

படிக்கட்டில் ஆடைகள் அடித்து செல்லப்பட்டிருந்த
அந்த இரவில்
இன்று போலவே
பெரு மழை
பெய்து கொண்டிருந்தது.
எங்கள் உடல்கள் மீது
முழு நிலா
தவழ்ந்து கொண்டிருந்தது.

வழி தப்பிய வண்ணத்து பூச்சி

சாளரம் வழி தடுமாறி
அறையில் வந்து விழுந்தது
ஒரு வண்ணத்து பூச்சி

தரையில் அக்னி உருகி கொண்டிருந்தது

நகரவும் இயலாது தவித்த
அதன் மீது
மின் விசிறியை திருப்பி விட்டேன்
சுழன்ற காற்றில் பறந்து
வாசல் வழி வெளியேறியது
ஒரு பூவை கனவிலும்
மலர்த்த இயலாதவனிடமிருந்து
நீயேனும் தப்பித்து விடு…

வெளியே மரங்கள் பூத்து குலுங்குகிறது


Painting Courtesy :

Butterfly  – beautifuldawn designs

Little Girl Fishing – Silhouette Design Store

About the author

பின்னி மோசஸ்

பின்னி மோசஸ்

குமரி மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டிய ‘திருத்துவபுரம்’ ஊரைச் சார்ந்தவர் பின்னி மோசஸ் .தமிழ்த் திரைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். ‘நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து’, ‘மேக்தலினா’ ‘தெங்கு’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website