-
பேய்க் கவிதை
வார்த்தைகள் இல்லாத காகிதத்தின் ஒரு பகுதியில் கவனம் செலுத்துவது போல பார்க்கும் நண்பரே! அந்த மனிதன் எப்படி சாலையைக் கடந்தான்?
கடந்ததைத் தவிர எதுவும் தெரியாது?
இறந்த மூன்றாவது நாளில் எழுந்து நடந்த உலகின் இரண்டாவது மனிதன் அவன். இதைக் கேள்விபட்டால் அவன் குடும்பத்தினர் வருந்துவார்கள். ஏசுவின் சாயலில் வாழ்ந்த குடிகாரன் அவன்.
கவலைப்படாதீர் அவன் நடந்ததைப் பார்த்ததற்கு நானே சாட்சியானது போல அவன் அடுத்த இறப்பிற்கும் நானே சாட்சி, அது சரி நீங்கள் யார்?
நான் போன வாரம் இறந்தவன்.
-
கீழே விழுவதால்
ஆப்பிளும் கத்தியும் அருகருகே இருந்தன. நெடு நேரமாய் ஆப்பிள் கத்தியிடம் கெஞ்சியது. என்னை வெட்டுவதற்குப் பதிலாய் ஒரு கழுத்தை வெட்டு.
ஆப்பிள்களை அடிக்கடி வெட்டும் சுகத்திற்காகவே யார் கழுத்தையும் வெட்ட துணியமாட்டேன் என்று சொன்னது கத்தி:
மேசையிலிருந்து விழுந்து சிதறி உயிரை மாய்த்துக்கொண்டது ஆப்பிள்.
கத்தி சொன்னது: கீழே விழுந்ததால் ஆப்பிள் போல அதிகம் பேசப்பட்டதில்லை எதுவும்!
-
அசந்து தூங்கிய நடிகை
ஒரு வார்த்தைக்குப் பிறகு, மற்றொரு வார்த்தை இருப்பது போல ஒரு உதட்டுக்கு அருகில் மற்றொரு உதடு இருப்பது போல ஒரு காதலின் முடிவில் இன்னொரு காதல் இருக்கிறது
உறித்த பாதாம் போன்ற நடிகையின் நான்காவது காதல் திருமணத்தில் முடிந்தது. வெளிப்படையாக நடித்தது போலவே சோதிடர்கள் குறித்த முதல் இரவு நேரம் பற்றியும் பேட்டி அளித்தாள்.
இரவு 9:15 மணி ஆனது பல லட்சம் பேர் கற்பனை செய்தார்கள். சிறு மலரைப் போல அவள் அசந்து தூங்கினாள்.