1. கனவு
நாய்
கவ்விக்கொண்டு ஓடியது
கிடைத்ததை.
துக்கத்தின் கடைசிப் பாடலில்
பரிட்சயமான ராகம் ஆழமாய் இழைகிறது
விடிந்ததது மேலும் ஒரு பகல்
கருப்பாய்
எப்போதோ எழுதிய வரியில்
பார்த்து ரசித்த அக்கண்கள் ஒளிவிடுகின்றன இப்போதும்
தாகத்தில் ஒரு கைக் குளிர்ச்சியைப் பருகியிருக்கிறேன் அக்குரலில்
என்னை உன் கரம் கொண்டு
இழுத்துவா
தொடர முடியாது மேலும் இக்கனவை.
2.வன்முறை
அந்தப்பெயரில்
நீ கச்சிதமாகவில்லை எனக்கு.
எல்லோரும் அழைக்கிறார்கள் என்பதற்காய்
அப்பெயரில்தான் அறிமுகமானாய் என்பதற்காகவெல்லாம் பொறுத்துப்போக முடியாது.
வாதுமை மரத்தில் தனித்து சிவந்த ஒற்றையிலை போல
பிரத்தியேகமாய் உச்சரிக்கப்படவேண்டும்
உன் பெயர்.
வேறென்ன
அன்பென்பது ஒருவித வன்முறை.
3.காலம்
வெறுமையை அறைக்குள் தாழிட்டு
ஒவ்வொரு முறையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதும்
பொய்க்குதிரையின் காலடி ஓசைக்கு
ஒவ்வொரு இரவையும் ஊதி அணைத்து
குகையின் அந்தகாரத்திற்கு
கண்களைப் பழக்குவதும்
வாசமில்லாப் பகல்களை
வாசித்து முடிப்பதும் கடினமில்லை
அடுத்த கூட்டுப்பருவதிற்கு
நீண்ட தூரமெனக்காட்டும்
கைக்காட்டி மரத்தை கழட்டி வைத்த பின்.
மிக அருமை