-
உண்மை
உண்மையெனும் ரோஜாவின் மணம்
ஊர்முழுக்கப் பரவும் என்றபடியே
இதழிதழாய்ப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆளுக்கொரு பிடி யள்ளிக்கொண்டார்கள்.
சிலர் வாயில் போட்டு மென்றார்கள்
சிலர் மூடிய உள்ளங்கையில் முனைப்பாகக் கசக்கியெறிந்தார்கள்.
சுருங்கிக்கிடந்த இதழொன்றை யெடுத்து
இதுதான் முழு ரோஜா என்றார் ஒருவர்.
பின்னோடு வந்தவர்கள் ’அதேதான், அதேதான்’ என்றார்கள்.
வழியெங்கும் காலையில் இறைந்துகிடந்த
இதழ்களின் வண்ணம்
அந்தியில் வெளிறிப்போயிருந்தது.
இதுதான் அசல் ரோஜா நிறம் என்றார் ஒருவர்.
‘அதேதான் அதேதான்’ என்றார்கள்
அருகே நின்றிருந்தவர்கள்.
நூற்றுக்கு நூறு உண்மை
சில பத்திருபதுகள் குறைந்து திரிந்து
அரைகுறை உண்மையாகி
கரைகடந்து நகர்வலம் போய்க்கொண்டிருப்பதைக்
கண்ணால் பார்த்ததாய் யாரோ சொல்ல
யாரோ கேட்க……….
-
சூழமைவு
அருங்காட்சியகத்திலான அரிய சிற்பம் ஒன்று.
அழகோ அழகு!
ஆழ் அமைதியே அலங்காரமாய் அங்கே நின்றுகொண்டிருக்கிறது.
அவ்வப்போது அதைச் சுற்றி சில பூக்கள்
மலர்ந்திருக்கின்றன.
அவற்றின் சுகந்தம் அசாதாரணமாய்
அது நின்றிருக்கும் இருட்தாழ்வாரத்தின் ஜன்னல்திறப்பினருகே
சுற்றிச்சுற்றி வருகின்றன சில வண்டுகள்
புள்ளினங்கள்
யானைகள் யாளிகளும்கூட.
கவனமாகப் பராமரிக்கும் பாதுகாவலர்கள்
இரவில் சில சமயங்களில் அந்தச் சிலை
தன்னோடு பேசும் என்கிறார்கள்.
தனக்குத்தானே அத்தனை அருமையாகப்
பாடிக் கொள்ளும் என்கிறார்கள்.
அவர்களைப்பார்த்தால் மனநோயாளிகளாகத்
தோன்றவில்லை.
பிராபல்யத்துக்காகப் பேசுபவர்களாகவும்
தெரியவில்லை.
தவிர,
அடிக்கடி அங்கே செல்லும் எனக்கே
அந்தச் சிற்பத்தின் கன்னங்குழிந்த அன்பு கனிந்த புன்சிரிப்பைப் பார்க்கக் கிடைத்திருக்கிறது.
ஆனால் நிறைய பேர் அது பழையதாகிவிட்டது என்கிறார்கள்.
அது பேய்போல் இருக்கிறது என்கிறார்கள்.
அது அருங்காட்சியகத்தில் இடம்பெறத்
தகுதியற்றது என்கிறார்கள்.
அதை அங்கிருந்து அகற்றிவிட
வேண்டும் என்கிறார்கள்.
அது பேசுவதாகச் சொல்லும் காவற்காரரை
வேலையிலிருந்து அனுப்பிவிடவேண்டும் என்கிறார்கள்.
அது கன்னங்குழிய அன்புகனியப் புன்னகைப்பதாகச் சொல்லும்
என் காலை யொடித்து அங்கே வரவிடாமல் செய்ய
வேண்டும் என்கிறார்கள்.
எல்லாவற்றையும் மௌனமாகச்
செவிமடுத்தபடியிருக்கிறோம்
நானும்
என்னொத்த பார்வையாளர்களும்
அந்தப் பாதுகாவலர்களும்
அச்சிற்பமும்…….
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)