-
ஈ
அன்புமிகுந்த தேநீரை
ஒரு சைனத்தின் கோப்பையிலிருந்து
நேர்த்தியான மண்குடுபையில் ஊற்றி
மெதுவாக நிரப்புகிறேன்
அது வழிய வழிய
ஞானத்தின் வழி பிறக்கிறது
ஆவி பறக்க பருகுகிறேன்
மெதுமெதுவாக நான் தே நீராய் மாறிக்கொண்டிருக்கிறேன்
ஒரு மௌனத்தை
அதன் அதியமைதியை
ஒவ்வொரு மிடருக்கும்
கலைத்துபோட்டு விளையாடுகிறேன்
இந்த தியானம்
ஒரு தேநீருக்கும்
ஒரு மிடருக்கும்
ஒரு அமைதிக்கும்
ஒரு மனிதனுக்கும்
இந்த பூவுலகிற்கும் இடையில் நிகழும்
ஒரு வழிபாட்டு பகடி
காலியான தேநீர் குடுபையின் வாயில்
கடைசியாக ஒரு ஈ பறந்து வந்து அமர்ந்தது
அதைத்தான் நீங்கள் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்
-
வாழ்வு ஒரு மயிரைப்போல் உதிர்கிறது
வாழ்வு
ஒரு மயிரைப்போல் உதிர்கிறது
மனதிலிருந்து இனிமையான பாடல்கள்
சோகமாக ஒலிக்கின்றன
வயதுகூடிய உடலில் சவநாற்றம்வேறு உற்பத்தியாகி தொலைத்திருக்கிறது
வெளியெங்கும் கடும் பனி சுடுகிறது
அறைக்குள் கர்ப்ப பையின் கதகதப்பு
ஔிந்துகொள்ள பிரமாதமான இடம்
நான் அமர்ந்திருக்கிறேன்
என்னைச் சுற்றி எந்த அணக்கமும் இல்லை
உயிர்ச்சூடின் ஆவி
வியர்வையில் நனைகிறது
நிறங்கள் கலந்த ஔிச்சம்
அசலைப்போல்
ஒரு மாயத்தை பூணுகின்றது
சற்றே கால்களை ஆட்டிப் பார்த்தேன்
அறை தூளியைப்போல் ஆடியது
தலைச்சுற்றி சுழன்று விழுந்தேன்
நிசப்தமான அறைக்குள்
யாருடைய இதயமோ படபடவென துடித்துக்கொண்டிருந்தன
நான் பின்பு எழுந்திருக்கவேயில்லை
என்பது பிரபஞ்சத்திற்கு ஒரு பொருட்டேயில்லை