-
நீர்த் தழும்பு
“தழும்புகள் மறைய
சுலபமான வழி? ” தேடிக்கொண்டிருந்தேன் கூகுளில்
வெங்காயம், பாதாம்
எலுமிச்சை, கல் உப்பு
இன்னும் பல பொருட்கள்
இன்னும் பல முறைகளென
நீண்டது குறிப்புகள்
தேர்ந்தெடுப்பதற்கு முன்
தழும்பின் வகைபற்றிய
தெளிவு முக்கியமென்றார்கள்
காயத்தை மூடிய பொருக்குகள்
உதிர உதிர
கெட்டித்தன்மை கொண்டு
மேடேறிய கருப்புத் தோல்
கருவளையக் கண்களாகி
கால் முட்டிக்கு கீழே
முழித்துக் கொண்டிருந்தது
தொட்டு பார்ப்பதற்கு முன்பாக
அந்நாளில்
வெட்டு ஏற்படுத்திய
கூர் கத்தியை சபித்தது
என் அநிச்சை
பீறிட்ட செங்குருதிப் பாதையினை
முத்தமிடுவதைப் போல்
அழுந்த ஒத்தி
அடைத்த யென் விரல்களுக்கு
இப்போதுமென் நன்றிகளை நவில்வதுண்டு
இது பரவாயில்லை
நீரெழுச்சி வற்றிப்போன
கல் மலையில்
தடயமற்ற தழும்பு
வான் நோக்கிக் கெஞ்சிக்கொண்டிருப்பது
எத்தனை பாவமில்லையா.
ஆலைக் கழிவுநீர் கலக்க
எதிர்ப்பின்றி அழைத்துச்செல்லும்
அந்த நதியொரு
வாயில்லாப் பூச்சி
காண நேர்ந்தது இன்று
கவலை கூட்டியது
கையறு நிலை
ஆழநீர் ஒளித்து
வைத்திருக்கும்
ரகசியங்களில்
அதன் வலியுமுண்டு
வெளித் தெரிவதில்லை தழும்பு.
-
இருவரின் கடவுள்கள்
எனது ஆடைகள்
உனக்குப் பொருத்தமாக
இருக்கின்றன
அதிர்ஷ்டவசமாக
ஒரே பெயர்தான்
இருவருக்கும்
நடையிலும்
மொழியிலுங்கூட
கண்டறிய முடியாது
வேறுபாடுகளை
இருவரின் கடவுள்களும்
பேசுவதில்லை
ஒரே வானம்
உனக்கும் எனக்கும்
தெரிந்த
நீலநிறத்தில்
பொழுது புலராத நிலையில்
விழிப்புத் தட்டியதில்
தொக்கியிருக்கும்
என் கனவின் மிச்சத்தை
முடித்துத் தா
அதற்கு முன்னால்…
உன் பசிக்கு
உணவெடுத்துக் கொள்ளவா நான்?
-
பனையோலைப் படகு
இளவெயில் பூசி
மினுமினுத்திருக்கும்
தங்கநிற வேப்பங்கனி
பழுத்துதிர்ந்த
அம்மரத்தின் கீழ்
நுங்குக்குலை ஏற்றிய
வண்டிக்குரியவன்
நெய்து தந்த
பனையோலைப் படகில்
மோந்தூற்றிய
பத நீரருந்துகையில்
பிடறியைத் தழுவி
உச்சந்தலை வழியாக
மூச்சில் கலந்து
முகம் மலரச் செய்கிறது
பிறந்த மண்வாசனை
-
ராஜயோகம்
யாராவது
பைத்தியமென்று
பெயர் வைத்திருப்பார்களா?
ஆனால்
அப்படித்தான்
அழைக்கப்படுகிறான்
அவன்
எவர்
கட்டளையையும்
பொருட்படுத்தாது
இயங்கும் அவன்
சிரித்திடவும்
அழுதிடவும்
காரணத்திற்குக் காத்திருப்பதில்லை
ராஜயோகம்
எப்படி மனப் பிறழ்வன்
என்றாகும்
தன்னுள் தோன்றும்
சொற்கள் யாவையும்
காற்றோடு விளாவிக் கரைப்பதுவாக
அபிநயிக்கிறது
அந்தக் கைகள்
குழந்தையமை குன்றாது
பாவத்தின்
பதம் பாராதவை
புனிதனின் புனைபெயர்
பைத்தியமாயென்ன?
அடக்கி வைத்த
அதீதங்களின் வெடிப்பு
தீவிரத் திணிப்பின் தாளாமை
சூறையாடப்பட்ட சுயமென
எக்கச்சக்கங்களின் வளைய மத்தியில்
மாட்டிக்கொண்ட எளியது
உடைபடத்தானே செய்யும்
குழம்பிக் கிடக்கும்
மனதனின் மீது
குறைந்தபட்சம்
கல்லெறியாதிருத்தல்
தொழுகைக்கு ஈடு.