-
கனவு இருக்கிறது
முதிரா இரவுகளில்
சத்தமிடும் தவளைகள்
இளங்காலையில்
பாடிடும் குயில்
சன்னலோரம்
என் குரலுக்கு
செவிமடுக்கும் குட்டிப்பூனை
என்னை வழியனுப்பி விபத்தில்
உயிரிழந்த டைகரெனும்
வளர்ப்பு நாய்க்குட்டி
இவர்களோடு நான் பகிர்ந்திருக்கிறேன்
அடைகாக்கும்
ஒரு சிறுமியின் ஆசைகள்
சுருக்குப் பையென
உள்ளே பொதிந்திருந்ததை அறிவர்.
இத்தனைக் காலத்திலும்
எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டதாகச் சொல்லும் ஊர்
எனக்கு வெளியே இருக்கிறது
அடைகாக்கும் பறவையென
எனக்கென கனவொன்று அப்படியே இருக்கிறது.
-
சீதே…
கைகளுக்கு களிம்பு பூசி நகங்களுக்கு நிறமூட்டிக் கொண்டிருந்தவளின்
ஓவியம் கண்டேன்
ஓவியத்தில் அவளின் ஆக்காட்டி விரல்
நீளமாக வளர்ந்தது அதனுள் கிளைத்தது
அடர் நிலமும்
சிலநூறு கைகளும்
சீரற்ற விரல்களும்
ஒன்றன் விரலில்
கரும்பு
மற்றொன்றில்
தேயிலை
இடதுகைச் சிரட்டையில் ரப்பர்பால்
வலக்கையில்
காப்பி விதைகள்
இன்னும் இரு கைகளில் அள்ளிப்பிடித்த நெல்மணிகள்
ஓவியத்தின் கட்டைவிரல் நெடுக வளர்ந்த
செம்பனை
பனையின் குலையெலாம்
மண்மகளின் கொங்கைகள்
சுண்டு விரலைத் தாவிப்பிடித்த மிளகுக் கொடிகள்
வெற்றிலையோடு படர
செழுமை விரலின் பூச்சுகளுள் அடர் வண்ணம் தகிக்க
நடுவிரல் நீண்டு
அழகான பெண்ணின் முகமானது
பலதிக்கின் குரல்கள்
ரூப்கன்வர் சாயல்
இல்லை இல்லை
நிர்பயா
அவளும் இல்லை
திஷா
இல்லை இல்லை
பத்மாவதி
அவளும் இல்லை
ஆசிஃபா
இல்லை இல்லை
நளாயினி
அவளும் இல்லை
சீதே சீதே
இல்லை இல்லை
நளாயினி
தமயந்தி
ஆசிஃபா
பத்மாவதி
நிர்பயா
சீதே..
-
நிலவில்லா வானம்
முடிவிலா பணியில்
அதே காலை அதே பகல்
மீண்டும்
அதே காலை அதே பகல்
புன்னகையை துடைத்த
அலுப்பும் சலிப்பும்
இயல்பில் வந்தவளின் இத்தனை மாதங்களில் சேமித்த வலி
அனுபவம்
மகிழ்ச்சி
எல்லாம் கலவையாக
பலகனியில் அமர்ந்தபடி
செம்போத்துக்கு
தேன் சிட்டுக்கு
சீழ்க்கை அடிக்கிறாள்
தட்டாங்கல் விளையாடத்துடிக்கும் விருப்பத்தோடு
தன் மனதில் புதைந்த
நட்பைத் தேடினாள்
தூரத்தில் தொலைந்து போனதாய்
உலவிய நட்பு
ஓடைக்குள் புகுந்து
மீன்களை சேமிக்க
தேங்கிய நீரில் போடப்பட்ட
தூண்டில் முனையில்
இரண்டு மனங்கள் ஊசலாடுகின்றன
உடுக்கள் நிறைந்த வானின்
மீண்டுமொரு
நிலவிலாக் காலம்
-
ரோபோ மிஸ்
வகுப்பறை விண்மீன்கள் கண்டிப்பை விரும்பாது
அன்பை ஒளிர்கிறது
கையில் பாடக்குறிப்புகளோடு உரையாடல் தொடங்கினால்
பாடம்தவிர சார்புக்கதைகளில் லயிக்கும்
யூகலிப்டஸ் மரச்சருகும் வேம்பின் இலையுதிர்வும்
நெருக்கடிக்கு உள்ளாக்கும் எமதன்பை
மூளையை உரைகல்லில் தேய்த்து
சில ஜெல்லிமீன்களை அடைப்போம்
ஒரு நட்சத்திரத்திற்கு உபதேசம் பிடிக்காமல் திமிரும்
மற்றொன்றுக்கு கோபம் வந்தால் புத்தகத்தைக்கிழித்து
ஆய்வுக்கூட குடுவையை உடைக்கும்
தீபாவளிக்கு வெடி வைத்தவனை
செல்பேசியில் படம் பிடித்து
ஆதாரம் காட்டியவரின் செல்போன் அன்றே அம்பேல்
நெருக்கமான வகுப்பு தோழி முன்
பாடப்பகுதியில் கேள்விகேட்டு அவமானப்படுத்தியதாக
ஆசிரியர் அறையை கொளுத்திப் போட்ட நட்சத்திரம்
தலைமறைவு
விபத்தொன்றால் இடுப்பிலும் கழுத்திலும்
பெல்ட் அணிந்து நிலம் அதிராது நடமாடிக் கொண்டிருப்பவளை
ரோபோ டீச்சர் என்கின்றன
இந்நட்சத்திரங்களுக்குத் தெரியாது
தேர்வை நோக்கி நகர்த்துகிற நடைமுறையில்
வாழ்வதெப்படி என போதிக்காத
கல்வித்திட்டத்துக்குள் அவள்
எப்போதோ ரோபோவாகிப் போனாளென்று