1.
வெற்றிடம்
எப்போதும் வெற்றிடமாக
இருப்பதை நீங்கள்
கவனித்தது உண்டா
வெற்றிடமாக இருக்க
ஒவ்வொரு முறையும்
ஓடித் தோற்கும் மனித மனங்கள்
மூச்சிழைக்கும் சத்தம்
மிக மெல்லிதாய்க் கேட்கும்
வெற்றிடம் பார்க்க
அப்படியொன்றும்
அழகாய் இருப்பதுமில்லை
எனினும்
தொடரும் தேடலில்
வெற்றிடம் என்ற ஒன்று
உண்மையில்
வெற்றிடமாக இருப்பதில்லை.
வெற்றிடத்தைச்
சுமக்க இங்கு
யாரும் பழகவும் இல்லை
2
தனக்கான சிம்மாசனத்தில்
ஒரு காலைக் குத்துக்காலிட்டும்
மறு காலைத் தொங்கவிட்டும்
ஆசனத்தின் கைப்பிடியைப்
பிடிப்பதைப் போல
அந்தக் கல் இருக்கையில்
வலக் கையை ஊன்றி
இடக்கையில்
நாவல் பழ நிறப்புடவையின்
முந்தியைச் சுற்றியும்
மிடுக்காக உட்கார்ந்திருக்கும்
பேருந்து நிலையத்தில்
பேருந்திற்காகக்
காத்திருக்கும் அவளைப்
பார்த்தவுடன்
ராஜமாதாவாக
நீங்கள் உருவகிக்கலாம்
பசியின் ரேகை படர்ந்து
ஒட்டியக் கன்னக்குழியுடன்
ஒடுங்கிய தேகம் பார்த்தும்
உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
பத்துக்குப் பத்து அளவு அறை கூட
அவளுக்கு இல்லையென்பது
3
அந்தப் பூங்காவில் இருக்கும்
சீசாவில்
முன் பின்னாய்க் காலை எம்பி
தனியே நான் மட்டுமே
அமர்ந்து ஆடுவேன்
நான் அப்படி ஆடுவதைச்
சிலர் கை கொட்டிச் சிரிப்பார்
சிலரோ பாவமாய்ப் பார்ப்பர்
சிலர் கவனியாமலேயே
நகர்ந்துவிடுவர்
நான் ஆடி முடிக்கும் வரை
மேலும் கீழும் ஏறி இறங்கி
அழுத்துக்கொள்ளும்
சீசாவிடம் இருந்து
விடை பெறும்போதெல்லாம்
என்னை யாரோ கவனிப்பது
போலவே இருக்கும்
அன்றும் அப்படித்தான்
தனியே ஆடத் துவங்கியதும்
எதிர் இருக்கையில்
பறந்து வந்து அமர்ந்தது
நாளும் என்னைக் கவனித்து
நின்ற
மரத்தின் ஒற்றை இலை
4
தெரு முக்கு வரை
மணம் வீசும்
பெர்ஃப்யூமை
ஒவ்வொரு முறை திறக்கும் போதும்
அனல் வீசும்
தோசைக்கல் முன்
கால் கடுக்க நின்று
வெந்து திரும்பும்
அப்பனின்
வியர்வை வாடை
நாசியைத் தொட்டு மறையும்