cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

கோதமலைக் குறிப்புகள்

கண்ணன்
Written by கண்ணன்

பொன்னம்மா பாட்டி

ஆறில் மிஞ்சியது
நான்கு
தாத்தா பிரசங்கத்திற்கு
ஊர் சுற்றி வர
பணியாரம் சுட்டு
பிள்ளைகள் வளர்த்திருக்கிறாள்
சற்றே அதிகமான மீசை
குள்ள உருவம்
வட்டப் பொட்டு
அவள் சுடும்
ஆப்பம் அவ்வளவு ருசி
மூன்று பேரன்களில்
அண்ணனிடம் மட்டும்
அவ்வளவு பாசம்
கீற்றுக் கொட்டகையில்
மணலில் அமர்ந்து
மம்பட்டியான் பார்த்தது
நேற்று போல நிழலாடுகிறது
அம்மாவுக்கும் அவளுக்கும்
எப்போதும் ஆகாது
பையனுக்கே பால் விற்றவள்
நீர் கலக்க வலுத்தது சண்டை
கோபம் வந்தால்
வாயில் வசவும்
புடவையும் சற்றே
மேலேறும்
விஷப்பூச்சிக் கடித்திட
‘மகமாயி புள்ளய காப்பாத்து’
எனைத்தூக்கி ஓடிப்போய்
மருத்துவமனை சேர்த்தவள்
கனகாம்பரம் விற்றுக்
காசு சேர்த்தவள்
பசப்பு வார்த்தை கேட்டு
சொந்தத்திடம் இழந்து விட்டு
நெஞ்சைப் பிடித்தபடி
‘தோட்டத்துக்கே கூட்டிக்கிட்டுப்
போய்டுங்க’
கேட்டுக் கொண்டே
யார் முகமும் பார்க்காமல்
போய்ச் சேர்ந்தாள்
மகராசி.


பெருமாள் தாத்தா

பாட்டிக்குத் தம்பி
எங்களுக்கு எப்போதும்
பெருமாள் தாத்தா
தோட்டத்திற்கு வந்தால்
சில மாதங்கள்
பெரும்பாலும் வருடங்கள்
கல்சட்டி தூக்கி தூக்கித்
தலையெல்லாம் சொட்டை
குடித்த பின் தாத்தா
குழந்தையாகி விடுவார்
‘பசங்க பெருசாயி
ஒக்காளி
எல்லா தோட்டத்தையும்
வாங்கிருவானுங்க
இருங்கடா’
தாத்தாவுக்கு பெருமாளு
மச்சான் சலம்பினாலும்
மனசுக்குள் சந்தோஷம்
மனைவியைவிட
மச்சானிடம்தான்
பிரியம் அதிகம்
வெகு நாட்களுக்குப் பின்
தோட்டம் கைவிட்டுப் போனபின்
கைபிடித்துப் பேசியவர்
மூளை நரம்பு வெடித்து
இறந்து போனார் இரண்டாம் நாளில்.


 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website