cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

பவித்ரா பாண்டியராஜூ கவிதைகள்


  • ஊன்

ஊமைக்கண் விழித்தெழும் கனா
பல்லிடுக்குச்சதையாய்
நாறும் பகல்.

மோகக்கண் பித்தெழுங்கோடி
ஞாலம் அதுஅதுவே
வான் நீளும் சுமை
இவ்விருள் சுரக்கும்
சுக்கலாய் கழியும் யாமம்.

மேகக்கருக்கலில்
காற்றில் புணரும் கிளையின்
சதர் நாட்டிய அபிநயம்
காற்சதங்கை குலுங்க குலுங்க
கொங்கை கோளத்தின்
குறுமிளகை வருடும்.

என்னமுதுரைக்கும்
தாகமறியா கடற்கயலனே
காமம் புகலா நெடுவனமிங்கோர் சூன்யம்.


  • துயரின் கடைசி அத்தியாயம்

மந்தகாசப்பூனையொன்று
பாடி பாடி அழைக்கிறது.
யாரும் பார்க்காத போது
வேட்டையாடிய வௌவாலை
உண்ண கொடுக்கிறது.

ஓ ஜீவனே

என்னைத் துரத்தும் ஒரு ராத்திரியில்
உன்வசமற்ற சொல்லில்
பூனைவடிவில் எனக்கோர்
புனைக்கவிதை வடிக்கிறாய்..

மஞ்சள் காமாலை பீடித்த
சாயந்திரத்தில்
குழைந்து சரியும்
பனிக்கட்டிகளை பூனையைப்போல்
வீடெங்கும் அடுக்குகிறேன்

என் காமம்
அறுந்து விழுந்த வாசல் படியில்
நீரோ மன்னின்
வாத்தியக்கருவியை இசைக்கிறாய்.

மியாவ் மியாவ் என்று
அறைக்கூவல் சப்தம்
எங்கோ ஒலிக்கிறது.


  • குரல்வளை

ஏகாந்தங்களை சரிக்கும்
தயக்கம் மேவிய
அந்தியின் சிறுபிறழ்வு.
நிச்சமாய் இல்லாமல் போயிருக்கும்
பருவம் தப்பிய நோய் தின்னும் பூதம் நான்.
இத்துணையற்று
மரநிழலில் தவித்துறங்குகிறேன்.
பூரணங்களற்ற நட்சத்திரக்கொடியில்
சிறு பூ ஒளிரும் படியானதொரு
புன்னகை மறைந்து
கழுத்திலிறுக்கும் சர்ப்பம்.
வடிவங்களற்ற குரல்
எனை சூழ்ந்து
மொய்த்து மொய்த்து கொல்லும்.


  • அ’

முற்றிலுமாய்
என்னை விட்டு
விலகாத ஒரு கவிதை
என்னிடமிருக்கிறது.

அந்தக்கவிதையின்
வரிகளோடு
சில பர்லாங் தொலைவைக்
கடந்திருக்கிறேன்.

சிறுசிறு சொற்களாய்
எழுத்தைக் கூட்டிக் கூட்டி
வாசிக்கும்
அந்தக்கவிதையில்,
என் விரல் தோய்த்து
அ’ என்ற எழுத்தின் வேரில்
நட்டுவைத்திருக்கிறேன்.

விருட்சத்தைப்போல
அந்த மேகத்தைப்போல
ஆகாயமெங்கும்
பறக்கும்
அந்தக்கவிதையின்
கணுக்கால்
சில மணி
என் உள்ளங்கையில்
அழுந்த ஊன்றியிருந்தது.

முற்றிலும்
என்னைவிட்டு
விலகாத
அந்தக்கவிதையின்
வரிகள்
மிகவும் சூன்யத்தை
விளைவிக்கும்..


ந்த நாளின் நடுநிலையில்
தீப்பற்றியெறியும்
ஒரு வீட்டுமூலையில்
தாகம் தாகம் என்று
அலறுவதைப்போல்
காட்சியை வரைகிறாய்.
இரவெல்லாம் ஒரே
பிரகாசமாய்க் காயும்
நிலவின் திரியை
கொஞ்சம் கொஞ்சமாய்
அமர்த்துகிறாய்.
என்னதான் வேதனையோ
இந்த வெளிச்சம் பாவித்த
நோயை ச்சூ ச்சூவென
விரட்டத்துடிக்கிறாய்.
தீக்குச்சி வெளிச்சமற்ற
அமாவாசையில்
நானோ
ஒருக்களித்து உறங்குவேன்.


 

About the author

பவித்ரா பாண்டியராஜூ

பவித்ரா பாண்டியராஜூ

சென்னையில் பிறந்த பவித்ரா பாண்டியராஜூ தற்போது பெரம்பலூரில் வசிக்கிறார். விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கவிதைகள் மீதிருக்கும் காதலின் காரணமாகத் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘மிக நீண்ட உடலின் துயரம்’ எழுத்து பதிப்பகம் வெளியிட்டது. இவரின் கவிதைகள் பல்வேறு இணைய இதழ்கள் மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website