-
காற்றாக நீ
உணர்வுகள் மிகுந்து ஆன்மாவை வருடும்
அன்பின் நொடிகளில்
மகிழ்ச்சியைத் தூண்டும் இயற்கை சக்தியான
காட்டுக் காற்றின் கர்ஜனைக்கு
ஒப்பிடுகிறேன்
உன்னை
சூடாகவும் குளிர்ச்சியாகவும்
மென்மையான திரளில் தீண்டும் காற்றாய்
இதயத்தைத் தழுவுகிறது
பார்வை
எப்பொழுது வேகமெடுக்குமென
அறியாக் காற்றைப் போல
மாறுகிறது
மென் தீண்டலிலிருந்து புயலின் சறுக்கலுக்கு
செஃபிரின் பாடலான ‘Sweet Nothing’யை போல
இனிமையான வார்த்தைகளால் ஆத்மாவில்
ஆசையைக் கிளறி தீடிர் காற்றாய்க்
கனவுகளைக் காதல் நிறைந்த வானத்திற்குக்
கொண்டு செல்லும்
நீயே தான்
மௌன வருத்தத்தில் ஏங்க வைத்து
மனதில் ஆழத்தில்
நினைவுகளை மட்டும் விட்டுச் செல்கிறாய்
திசைமாறும் காற்றாய்
கருணையுடன் திரும்புகையில்
கனன்று கொண்டிருக்கும்
நேச நெருப்பை உணர்ச்சி காற்றில் ஊதி ஊதி
அரவணைக்கிறாய்
நுரையீரலை ஆசை சுவாசத்தால் நிரப்பி
சுதந்திரக் காற்றாய் அலைந்து திரிந்து
உலகெங்கும் சுற்றினாலும்
நம்மிடையேயிருக்கும் பாதையை மட்டும்
நீ செப்பனிடத் தவறியதே
இல்லை
உனது இருப்பில்
நான் மூச்சு விடாத குழந்தையாகவும்
இருக்கிறேன்
புயலில் சிக்கிய இலைகளாகவும் நடனமாடுகிறேன்
‘நான் நானாக’ இருக்க விடும் ‘நீ’ என்றும்
கட்டிவைக்க முடியாத காற்றாகவே
இரு
என் அன்பே!
-
மரணச்சுவை
நீயென்னை அலட்சியப்படுத்தும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
மரணத்துடன் ஒப்பந்தமிடுகிறேன்
நீயென்னை வேதனைப்படுத்தும்
கணங்கள் ஒவ்வொன்றும்
மரணத்திற்கு நிகரானவை
நீயென்னை நேசித்திடும்
ஒவ்வொரு கணமும்
மரணபீதியைக் கொடுக்கின்றன
நீயென்னை அன்பில் விழியேந்தும்
தருணங்கள் ஒவ்வொன்றிலும்
மரணித்தும் போகிறேன்
இருப்பினும்
வாழ்கையை உயிர்ப்புடன் வாழ்கிறேன்
எனச் சிலாகிக்கும் நொடிகளை
பைத்தியக்காரத்தனம்
என்கிறாய்
பைத்தியக்காரத்தனங்களை
இரசிக்கக் கற்றுக்கொண்டேன்
என்பதை மாத்திரம்
நீ
அறிந்துகொள்.
-
கற்பனை சக்தி
பறக்கும் பன்றிகள்
குரைக்கும் பூனைகளாகிய
தருணத்தில் தான்
பசுக்கள் மியாவ் என்கின்றன
பிடில் வாசிக்கும் சிலந்தியின்
இரையாக நிலவு ஒளிர
இன்பத்தில் குதிக்கும் பசுவைப் போல
நவீன உடையில் கோமாளி
நடனமிடுகிறான்
நிலத்தில் நடக்கும் மீன்கள்
நீரினுள் நீந்தும் பறவைகள்
இறக்கைகள் சுருங்கிய வண்ணத்துப் பூச்சிகள்
கம்பளிப் பூச்சிகளின் கூட்டுப்
புழுக்களாகின்றன.
விடியலின் வண்ணத்தை
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து பறக்கின்றபொழுதில்
இரவு மறையும் வரை
இரகசியங்களைக்
கிசுகிச்சுக்கும் ஒரேயொரு
நட்சத்திரம் மின்னிக் கொண்டிருக்கிறது.
பச்சை வானமும்
நீலப் புற்களும் சந்திக்கிற
இடங்களில் சந்திரனைப்
பாலாடைக்கட்டிகளால் செய்ய முடிவதில்லை
மேகமும் வானவில்லும்
தழுவும் நொடிப் பொழுதில்
புதையலுக்கு இட்டுச் செல்லும் சூரியன்
மாறுதிசையில் உதிக்கிறது
மாறுதிசையில் மறைகிறது
மழையோ மேல்நோக்கி எழுகிறது
பாடும் பாறைகளும்
நடனமாடும் மரங்களும்
பேசும் பூக்களும் ஒன்றையொன்று
முத்தமிட்டுக் கொள்கிற பொழுதில்
எலிகள் கர்ஜிக்கின்றன
சிங்கங்கள் முணுமுணுக்கின்றன
தேநீர் கோப்பைகளில்
யானைகள் ஒளிகின்றன
நெருப்பையுமிழும் யூனிகார்ன்
தேவதைகளோடு
யாழ் இசைக்கிறது
சுடரிலிருந்து பிரிந்த
பொறியொன்று இணை பாடலைப்
பாடுகிற மேடையில்
நாற்காலிகள் ஒலிபெருக்கியை
அடைகின்றன
தானே எழுதிக்கொள்ளும் பென்சில்கள்
தீர்ந்து போகிறபோது
புத்தகங்கள் உறங்க
வைக்கின்றன.
-
முரண்
நினைத்தால்
தும்மல் வருமென்றால்
நான் விழித்திருக்கும்
நொடிகளில் எல்லாம் நீ
தும்மிக்கொண்டு தான்
இருப்பாய்.
***
ஏற்றி வைத்த நெய் தீபத்தைப்
பொத்திப் பொத்திக்
காக்கிறேன்
கண்கள் கூச முகத்திற்கு ஒளி
சன்னதி முழுதும்
இருளின் ஒளி
சிரிக்கிறாள் அப்பத்தா.
***
Top notch சம்பளம்
Over Achiever Award
நேற்று சரியாக பேசவில்லை
Miss You என்கிறேன்
முட்டாள் எனத் திட்டுகிறாய்.