காக்காவும் குருவியும்
சந்தோசமாத் திரியுது…
இந்த மனுசப்பய மனசு மட்டும் பாழடைஞ்சுக் கெடக்குது..
சாதி சாதின்னு
கொடுந் தீயோடத் திரியுது…
சந்தர்ப்பம் கெடைச்சதும்
எளச்சவன ஏறிப் போட்டு மிதிக்குது…
எதுத்துப் பேச ஆளும் இல்ல ..
ஏன்னு கேட்க நாதியுமில்ல…
பறையனோட பறை மட்டும்
சத்தமாத் துடிக்குது ..
தமிழணங்கு
கோலச் செம்மேனியும்
குறுநகை இதழ்களும்
செம்மை நல்லாபரணங்களும்
நறுமுகைத் திருவலங்காரமும்
உருமாறியதெதற்கு..?
பிறைநுதல் தரித்த நறுந்திலகமும்
பட்டாடையுமின்றி
திருக்கோலம் மாறி
வெள்ளாடை தரித்ததெதற்கு..?
கருகருத்த மேனியும்
தலைவிரித்த கோலமும்
அச்சம் மிகுகூட்டும்
தீர்க்கக் கூர் பார்வையும்
பாஞ்சாலியையும் கண்ணகியையும்
நேர் காட்டும் ஆவேசமெதற்கு…?
அணங்கிவளை அடக்கிடத் துணிந்து
இடை சீண்டி உடை தீண்டி
வெந்தணலைக் கொட்டிய
மாற்று மொழியனை
ழகரமெனும் குத்தீட்டியால்
கொன்றழித்திடப் புறப்பட்டாளோ…?
பார் போற்றும் தமிழ் தமிழ் தமிழால்
சீர்கொண்ட நல்லினத்தைத்
தூற்றிடும் வேற்றினத்தாரின்
சாத்திரங்கள் கூறும்
கோத்திரங்களையெல்லாம்
தாள் கொண்டே நசுக்கி
ருத்ரதாண்டவம் ஆடவந்தாளோ…?
அறிவாய் தானே நீ….?
சாது மிரண்டால் காடு கொள்ளாது…
இன்னுமொரு விதி செய்வோம்..!!!
இனிய நற்றமிழைப் போற்றுவோம்..!!!
Painting Courtesy : Santhosh Narayanan