-
இன்னும் சிலையாகாத நிழல்
புதிய மனிதனைப் பற்றிய கற்பனையில்
எழுந்துகொள்ள மறந்துபோன
வைகறையில்
ஜன்னல்கள் அடைப்பட்டிருந்தன
அதன் கண்ணாடிக் கதவுகளைக் கொத்தியபடி
இன்னும் முழுமையாகப் புலர்ந்திடாத
வெளிச்சத்தின் நாகரீகத்தை
சிறகில் பூட்டியிருந்தது
நீல நிற வானில் மிச்சமுள்ள சொற்கள்
பிறகு
அத்தனையும்
மேகமென திரண்டு
வேறொரு காடு நோக்கி குளிர்ந்திருந்தது
சாலையின் சிறு பள்ளத்தில்
ஈரத்தின் விளிம்பு பூட்டி முகம் வரைந்த பொழுதை
பைக்கின் ரியர் வியூ கண்ணாடியில்
உட்கார்ந்தபடி
பிம்பத்தில் அலகு உரசும் காகத்தின் யோசனைக்குள்
நகரம் தீய்ந்து போயிருக்க
இந்த
நான்
மிதந்து கொண்டிருக்கிறது
வேறொரு காலம் நோக்கி
****
-
என்னோடு இருந்திருக்கலாம் என்பதாக..
திசையிழந்துபோன பயணங்களின்
சிறு கேவல்கள்
நம்ப முடியாத அவமானங்கள்
நினைத்து நினைத்து மருக
காரணமாகியிருக்கும் வாக்குறுதிகள்
ஏதொன்றிலும்
இல்லை அசல் முகம்
சந்தையின் கூச்சலுக்கு மத்தியில்
அமோகமாக நடைபெறும் பேரத்தில்
ஒவ்வொன்றும் வெவ்வேறு மதிப்பு நிலைகளோடு
தகுந்த மாற்றுகளின் பண்டமாகின்றன
உரிமை கோரும் துணிச்சலில்
கையோடு முடிச்சிட்டு பத்திரப்படுத்திக்கொள்ள முடிந்த
சுயத்தை
எக்கி பறக்க விடுகிறேன்
அது
எதிர்கால மூச்சுக்காற்றின்மீது
நிலமிறங்கி குமிழ் விடும்
அப்பகலில்
சிறு கல்
காத்திருக்கிறது
பால்வீதி கடந்து பாய்ந்திட
****
-
வேறொன்றென்பதில்..
பாதை நீண்டு முடிகிறது உன் அறை வாசலில்
அங்கிருந்து தொடங்க எத்தனிக்கும்
மௌனத்தின் சாயலை
கதவிடுக்கினூடே வெளியே தள்ளுகிறாய்
பற்றிக்கொள்ள மறுக்கும் அர்த்தங்களோடு
சதா மல்லுக்கட்டும்
நிமிடங்களை
என்ன செய்யட்டும்
எதிரெதிர் பொழுதுகளின் கனத்த தீண்டலில்
பரஸ்பரம் உடன்பட்டுவிட
ஒத்துப் போவதற்கு ஏற்ற தனிமையை
கோட்டோவியம் ஆக்குகிறேன்
ஆளற்ற வராண்டாவின் நீள அகலத்தில்
நிதானமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
உனது வெளிச்சம்
****
-
சலனமேயில்லாமல்..
இத்தனை நாள் எங்கிருந்தாய் என்று
ஏழாயிரம் முறையாக
கேட்கிறேன்
நீ
வேறெங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் வரை
உன்னருகில்தான் காத்திருந்தேன்
அத்தனை முறையும்
என்கிறாய்
நான் பார்த்த திசையையே நீயும்
வெறித்தபடி
****
-
தொலைவிலிருந்து..
வருவதாகத்தானே சொல்லிக்கொண்டிருந்தாய்
வானம் கண் மூடிக்கொண்ட நொடி முதல்
இரவைத் திறந்து வைத்து
காத்திருந்தேன்
நடு யாமம் வரையில் புரண்டுக்கொண்டு கிடந்தபோது
மெல்ல ஜன்னலினூடே தெரிந்தாய்
மின்னியபடி
சிறு
புள்ளியாய்
****
-
மூச்சுக்காற்றின் சொற்கள்
அது
அழைத்தபோது சரக்கொன்றை பூத்திருக்கவில்லை
கிளை கிளையாகத் தேடியலைந்த
மருட்டு
கிலியூட்டி தாவிற்று பொய்யிலிருந்து
உண்மையற்ற பாதாளத்திற்கு
ரசம் போன கண்ணாடியில் நுணுகி தெறிக்கிறது
பழைய முகம்
யாரும் அண்டியிராத புராதான சாயலோடு
சிறிய லிபியில் மறைந்திருக்கும் ரகசியத்தை
தின்று செரித்திருப்பதாக
பாறையின் இடுக்கிலிருந்து புகார் வாசிக்கும்
கௌளியின் அடையாளம்
பாடம் செய்யப்பட்ட கனவிலிருந்து கீழிறங்கவில்லை
ஏனோ
உயிர் உருளும் தண்டுவடத்தின் நீட்சியில்
விரல் பிடித்திழுக்கிறது
நட்சத்திர ஒளிமுனை
வேர் பரப்பி ஈரம் நுதம்ப
தலை கிறங்கும்
பாம்பின் வால் நுனியில் உயிர்த்திருந்தது
பிரபஞ்ச பாதை
அனைத்து கவிதைகளும் அருமை
சிறப்பு ❤️❤️❤️..