01.
முகம் மலர சிரித்துக்
கைநீட்டியவரை சற்றே
குழப்பத்துடன் கைகொடுக்க
‘மேச்சேரி காளியம்மன் கோவிலுக்கு அரிசி எடுக்கப் போறன்,
ஏதோ உங்களால முடிஞ்சது’ என்பவனை என்ன செய்ய முடியும்?
கடலைத் தோலை பையிலிருந்து எடுத்து
கடலையைத் தின்றபின்
தோலைக் கூட்டியபடியே சில்லறை கேட்பவனை என்ன சொல்லித் திட்டுவீர்கள்?
கோவில் வாசலில் குடித்தே செத்த
யாசகப்பாட்டி போய்ச் சேர்ந்து
ஆறுமாதமே ஆகும் வேளை
‘இவரா, ஒத்தப் பைசா போடமாட்டாரு’
என்பவனை அடிக்கவா முடியும்?
இத்தனை சல்லிப்பயல்களுடனும்
இன்னமும் சுற்றிக் கொண்டுதானிருக்கிறது
இப்பூமி
02
‘எக்ஸ்ட்ரா கப்பெல்லாம் இல்ல‘
பிடறி சிலிர்க்க வலது காலை உயர்த்தி ஆக்ரோஷமாய் எழுந்தது உள்ளிருந்த மிருகம்
‘என்ன…? சுடுன்னுதானக் கேக்கறன்‘
வாங்கிய கப்பிற்கு நன்றி சொல்லாமல்
‘என்னா திமிரு?’ என்றேன் மனைவியிடம்
தன்னை விடப் பெரியதிடம்
வாலைச் சுருட்டி
காலிடை வைத்தபடி குழைந்திருக்கும் நாயாக
பூனைகளைக் கண்டதும்
முழுச் சீற்றத்துடன்
படமெடுத்து ஆடும்
இந்தக் கையாலாகாத மிருகம்