-
மன்னன் பம்பரம்
அம்பரத்தில் பம்பரமாக
சுழல்கிறது பூமி
அதைச் சுழற்றியவன்
யாரென்று காண்பி
சுழற்றியவன் சாட்டையைக் கூட
விட்டு விட்டுச் செல்லவில்லை
பால்யத்தின் மரப் பம்பரங்கள்
பல வண்ணச் சப்பரங்கள்
பம்பரம் சுற்றுவதிலும் கூட
ஆண் ஆட்டம்
பெண் ஆட்டம் என்று உண்டு
நிலம் நோக்கி
பம்பரத்தின்
ஆணி இருக்கும்படி வைத்து
சாட்டையை உருவி
சுழல விட்டால்
ஆண் ஆட்டம்
வான் நோக்கி
பம்பரத்தின்
ஆணி இருக்கும்படி வைத்து
சாட்டையை உருவி
சுழல விட்டால்
பெண் ஆட்டம்
‘கோஸ்’ எடுத்து
உள்ளங்கையில் எல்லாம்
பம்பரத்தைச் சுற்ற வைக்க
எனக்குத் தெரியாது
தெரிந்தவரை நிலத்தில்
சுமாராக சுற்ற வைத்தாலும்
பாட்டி நான் பம்பரம்
சுற்றும் போதெல்லாம் சொல்வாள்
‘மன்னன் பம்பரம்
மணலிலும் ஆடும்’ என்று.
-
சிகரி
கோபுர உச்சிக் கலசத்து
நெல்மணிகள்
உன் பாதத்து நூபுர
அணிமணிகள்
மற்றதெல்லாம்
அப்புறத்தில் அப்புறம்
திரிபுரசுந்தரி
அருகில் அண்ணாந்து
பார்க்கும் கோபுரத்தை
தூரத்தில் இயல்பாகவே பார்க்கலாம்
பக்கத்தில் பார்க்கும் போது கிடைக்கும் பிரம்மாண்டத்தை
தூரம் அபாண்டமாக
மறைத்து விடுகிறது
பாண்டத்தில் பண்டமாக
உன் பனித்த ஜடையில்
இனித்தமுடன் நீ சூடுகிறாய் மலரொன்றை
குனித்தல் இல்லாத
கோபுரத்து வாயிலொன்றில்
குனுகும் கோயில் புறா
உனது மென்றோளையன்றி
மனித்த பிறவியையா வேண்டும் இந்த மாநிலத்தில்!
-
செம்மல்
ஒட்ட வெட்டினால் தான்
சளி பிடிக்காது என்ற
அறிவுரைக்கு இணங்கி
ஒட்ட முடியை வெட்டிய பின்
தலையைப் பார்த்து
கரிச்சா மண்டை,
சட்டி மண்டை என்று
அக்கம் பக்கத்து
அத்தைகள் அக்காக்கள் எல்லாம் கேலி பேசியது ஒரு காலம்
காலம் அகாலம் ஆகாமல் இருக்க
உண்ட ஆலாலத்தை
கண்டத்தோடு கட்ட
உமையின் விரல்கள்
முயன்ற போது
கண்டம் நீலகண்டமானது
அண்டத்தின்
வானமும் கடலும் கூடத்தான்
அரும்பு மீசையுடன் கூடவே
அருகம்புல் போல
புல் மேயும்
ஆட்டுக்கு இருப்பதைப் போல
தாடைக்குக் கீழ்
ஆங்காங்கே முளைத்த
தாடியைப் பார்த்து
‘ஷேவ் செய்யலயா சார்?’ என்று ஜோதி அக்கா தான்
முதன்முதலாக கேட்ட நினைவு
அதற்காகவே ‘ஜில்லட் கார்ட்’
ரேசரோடு ஷேவிங் க்ரீம், பிரஸ் வாங்கி சவரம் தொடங்கினேன்
அதன்பின் எப்போது என்னைக்
கொஞ்சம் தாடியோடு பார்த்தாலும்
ஜோதி அக்கா
அதே கேள்வியைக் கேட்க தவறியதில்லை
இப்போது மணமாகி
வேற்றூர் போன ஜோதி அக்காவை
சமீபத்தில் பார்த்தேன்
மூன்று வார தாடியோடு இருந்த நான்
ஆனால் இப்போது அக்கா கேட்கவேயில்லை
‘ஷேவ் செய்யலயா சார்?’
அரும்பு முகையைத் தாண்டி
அலராகி விட்டது
இனி வீயும் செம்மலும் தான்.
கவிதைகள் வாசித்த குரல்:
சுபா யோகா
Listen On Spotify :