1)
மார்கழிக் காலத்தில்
அடுப்பின் கதகதப்பைத் தேடும்போதும்;
தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு நடக்கும்போதும் ;
கருவாட்டுப் பானை அருகே வாலாட்டி நிற்கும்போதும் ;
நான் அச்சுஅசல் பூனையாகவே மாறி
மியாவ் மியாவ் என்கிறேன்.
கதகதக்கும் அடுப்பாகவும்
சின்னஞ்சிறு குட்டியாகவும்
வாசம்மிகு கருவாட்டுப் பானையாகவும்
எனதே எனதான
தனிமை என்னை சூழத் திரிகின்றது .
தனிமையின் தாக்கம் இப்படியே போகுமெனில்
சூடு கண்ட பூனையாய்
உன்னைக் கண்டும் ஓடிவிடுவேனோ என்பதுதான்
என்னுடைய ஆகப்பெரும் அச்சம் அன்பே!
2)
கையில் கிடைப்பவற்றை எல்லாம்
சிறுசிறு கீற்றாக்கிக்
கண்ணில் தென்படும்
அத்தனை பேரோடும்
பகிர்ந்துண்ணும் நான்
யாருமற்ற தனிமையை மட்டும்..
யாருக்கும் தெரியாமல்
திருட்டுத் தனமாக பானையை உருட்டிப்
பாலருந்தும் வெள்ளைப் பூனைக்குட்டியாய்
ஒருதுளிகூட மிச்சம் வைக்காமல்
நக்கிச் சுவைத்துவிட்டு
மீசைமுடிகளை நாவால் நக்கிக் கொள்கிறேன்.
3)
எனக்கே எனக்கான
நேரம் கிட்டும்போதெல்லாம்
கொழுத்த வெள்ளைப் பூனையை
என் மடியிலிட்டு வருடுவதைப்போல
இந்தத் தனிமையை வருடிக் கொடுத்தேன்.
மாமிசத்துண்டுக்கு அலையும்
பித்துப் பிடித்த பூனையாய்
நான் எங்கு சென்றாலும்
அது என்னைத் துரத்தி ஆட்கொண்டுவிடுகிறது.
தன் வாலால் வாஞ்சையாய் வருடும்
என் செல்லப் பூனைக்குட்டி அது!
4)
என்னோடு நான் பேச இயலாத
நேரப்பற்றாக்குறையில் தவிக்கிறேன்.
ஒரு நாளேனும்
ஆற அமர உட்கார வேண்டும்
மூச்சு விடாமல் சொல்ல
மிக நீண்ட கதைகள் உள்ளன.
எங்கே தேவையோ
அங்கே மிகச் சரியான ‘ம்’களால்
கதைகளுக்கு சுவாரசியம் சேர்க்க
அங்கெல்லாம் மெல்லிய மியாவ் கேட்கும்.
இம்மாதிரியான எளிய யுக்திகள்
எங்களுக்குள் மட்டும்தான் நிகழும்.
எங்களுக்குள் ஆர்வமிகுந்த
எவ்வளவோ மியாவ்கள் இருக்கும்போது
உங்களிடம் பேச என்ன இருக்கிறது?