cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

அகராதி கவிதைகள்

அகராதி
Written by அகராதி

ன் தீண்டிய நினைவில்
எவரும் தொடவும்கூட
அனுமதி
மறுத்துக் கொண்டே இருக்கும்
இந்த உடலை மீட்டுவிட முடியாமல்
தடுமாறும் பொழுதுகள் சுவாரசியமற்றவை

நினைவுத் தடத்தில் நிகழ்வு ரயில்


பயணம் தொடர்கிறது…

தன்னிடம் வரும் ஒவ்வொருவரிடமும்
அகத்தின் மூத்த தாய் போல பரிவுடன்
எதையாவது மொழிந்து கொண்டேயிருக்கிறது
மேற்கூரையிட்ட ‘ப’கர வடிவிலான
அந்தச் சிறிய பேருந்து நிறுத்தம்
ஆர்வமிகுதியில்
சற்று நெருங்கிச் செவியுற …

கல்லூரி மாணவியொருத்தி வந்து
காத்துக் கொண்டிருக்கிறாள்
பேருந்து வரும் திசையோ சாலையோ
கவனம் கொள்ளாது
கையிலிருந்த பேசியின் வழியாக
யாரையோ அழைத்துக் கொண்டிருக்கிறாள்
சிறிது நேரத்தில்
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்
அழைத்துச் செல்ல
“பார்த்துப் போய் வாம்மா என்கிறது”

மகனுடன் கோபித்த
நடைத்தளர்ந்த பெரியவர் ஒருவர்
வந்தமர்கிறார்.
தொடர்ந்து வந்த மகன் அழைக்க
இதழ் பிரியாது இறுகி விழுகிறதொரு  ‘ம்ம்ம்’
தொடர்ந்தழைப்பவனிடம்
இரத்தம் சுண்டிய வெறுமையில்
இளமையற்ற வறுமையில்
முனகிக் கொண்டே
போ வருகிறேனென எழுகிறார்
பேருந்து நிறுத்தம்
காலத்தைச் சபித்தவாறு,
“இருக்கும் வரை நிம்மதியாயிருக்க விடப்பா”
என்கிறது
பெரியவரின் மகனிடம்

“இப்படித்தான் தினமும் பேசிக் கொண்டிருக்கிறாயா?”
அலுப்புடன் அசுவாரசியமாய் கேட்க,
கேள்வியை ஒரு பொருட்டென மதியாது
தூரத்தில் இரு பெண் பிள்ளைகளுடன்
பதட்டத்துடன் வரும் பெண்ணைப் பார்க்கிறது.
நிறுத்தம் நெருங்கியப் பெண்ணின்
கண்களில் கண்ணீர்
விசும்பலுடன் அப்பா அப்பா என்கிறாள்
என்ன செய்யப்போகிறாய் என்று
திரும்பிப் பார்க்க
என் பார்வைத் தவிர்த்து
அப்பெண்ணையே பார்க்கிறது
பிள்ளைகள் இருவரும் ‘அழாதம்மா’
என்று
அழுது கொண்டிருந்தனர்.
பேருந்து வந்து நிற்கிறது
அங்கங்கே நின்று கொண்டிருந்த
சிலரும்
அப்பெண்ணும் பிள்ளைகளும் ஏறுகின்றனர்.

‘ப’கர வடிவ அந்தப் பேருந்து நிறுத்தம்
தன் இரு பக்கச் சுவர்களை
அப்பெண்ணை நோக்கி நீட்டுகிறது
ஆறுதலாக
நானும் ஏறி திரும்பிப் பார்க்கிறேன்
பின்னால் சிறிது தூரம் ஓடிவந்து
“அழாதே பெண்ணே அனைத்தும் உண்டு இவ்வாழ்வில்”
என்கிறது.
இதயம் சேர்ந்ததோ என்னவோ அதன் வார்த்தைகள்.
சிறிது ஆசுவாசமாய்க் கண்கள் மூடுகிறாள் அப்பெண்.
குனிந்து ஈரமானக் கண்களைத் துடைத்துக் கொண்டேன் .
பயணம் தொடர்கிறது. …

தோள் தாண்டும் பிள்ளையின்
தாடை தடவிக்கொஞ்சிய
தாயின் தொடுகைமில் முதன்முதலாய் துளிர்த்த
மலர்க் குஞ்சங்கள்
விரல்படுகின்றன.

சட்டென்று விரிந்து மணநத நறுமணம்
இதயம் நிரப்பி
இதழ்வழி
புன்னகையாகக் கசிகிறது

மேல் நகர்ந்த விழிகளில் ஒளிக்கருமை.
முளைவிட்ட மென் கோடாய்
முறுவலிடுகிறது உதட்டிழை!

மென்கோட்டின் பிரும்மாண்டத்தில்
சிறிதாகிறது வானும் பூமியும்!

மீசை‌ என்பது
ஆங்கிலச் சொல் திரிபென்கிறது அகராதி‌.
மேற்கொண்டும் வினவினால்
பதினான்காம் நூற்றாண்டில்
இத்தாலியிலிருந்து வந்தது
இச்சொல் என்கிறது வரலாறு.

அணல் என்பது தாடியாகுமென்பதை
‘மையணற்காளை’ என
நறுந்தேன் சொட்டாய் தெறிக்கிறது
நூற்றாண்டுகள் முன் தோன்றிய சங்கம்.

அவளுக்கோ
வரலாறு புவியியல் கடந்து
மெதுமெதுவாக வாமனனின்
கால்கள் முளைவிடத் தொடங்கியிருந்தன…


எதைக் கொண்டு மறைப்பாய்

கைகளிரண்டும் நீட்டி
யாருமறியா தன்னுலகின்
ஒற்றை உயிர் நீயென
தழுவிக் கொள்தலென்
இதய இயல்பு.
உனக்கிது
இருக்கப் போவதில்லை.
ஓய்வின் துளிகளில்
பலனெடுக்கப் பயன்பட்டு இருக்கலாம்
நான்.
அதனாலென்ன எனக்கெப்போதும்
இறக்கிவிட இயலா
பதி நீ!

நீண்ட நாட்களுக்குப் பிறகு
பரிமாற்றம் செய்து கொண்ட
அன்பின் தியாலங்களில்
கடத்திய வார்த்தைகளில்
அறிந்தேன்
நீ நினைத்திருக்கிறாய்
நான் மாறிவிடவில்லை என்று …
நான் மாறுவது என்றால்
உன்னை என் நினைவிலிருந்து
எடுப்பது அல்லவா
எறிந்தப் போதும்
பிழையாகப் புரிந்த போதும்
காயமளித்தப் போதும்
புரிய தவிர்த்த போதும்
மனந் துடிக்கச் செய்த போதும்
பிரிவில் அரற்றுகையில்
எட்டியும் பாராமல்
இன்புற்றிருந்தப் போதும்
போலவே
லழங்கப்பட்ட
வேறெந்த நிலையிலும்
நான் மாறியதே இல்லை.

அன்பின் பரிணாமங்களை
அப்படியே அந்தரத்தில்
விட்டுப் போய்
குதூகலித்து பின்
நெருங்கும் வேளைகளில்
பிழைப்பு, நிமித்தம், நிர்பந்தம்
போன்ற சொற்களால்
சமாதான ஊழியங்கள்
செய்துவித்துப் பழக்கப் படுத்தியிருக்கிறேன்
என் இதயத்திற்கு..

வளர்த்தெடுத்து
பக்கவாட்டுக் கூர்முனைகள்
கொடுத்த குருதியோடுப்
பிடித்துக் கொண்டிருக்கும்
நம்பிக்கையை
உடைத்துப்
போட்டு விடுகிறாய்.
பிடிவிடாது மேலும் அழுத்தமாய்
கைவசப்படுத்த
உடைபட்டத் துண்டுகள்
கிழித்துக் கொண்டிருக்கின்றன
என்பை யெட்டும் முனைகள்
ஓய்வதாயில்லை

இற்றுப் போக விழையும்
இதயத்தோடு
மல்லுக்கு நின்று
மட்கிப் போனாலும்
நேற்றும் இன்றுமாகப் பரவி
கைகளிரண்டும் நீட்டி
யாருமறியா தன்னுலகின்
ஒற்றை உயிர் நீயென
தழுவிக் கொள்தலென்
இதய இயல்பு.


குறிப்பு:

கோடைகாலத்தைப் பிறப்புவிக்கும்
முனைப்போடு முன் இரு மழைநாட்களை
கொடையாக்கிய
பின்பனிக்கால
வானத்தின் கீழ்
கண்கள் மலர்த்திக் கிடக்கிறது
நிலம்.
கடுங்கோடையின் பிளவுகளோடும் ஏகும்
அதன்
வான்கொள் பார்வையை
எதைக் கொண்டு
மறைப்பாய்…


Courtesy : Painting – JeremyYoung 

About the author

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website