1.நிசப்தம்
மழை
மண்ணில் ஓடிய நாளின்
விடியலில்
உணர முடிகிறது
இலை பிரிந்த
வலி கூறும்
மரத்தின் முனகலை.
2.வன்மம்
பாவனையாக
போடப்பட்ட ரொட்டித் துண்டிற்காக
நாயின் மூச்சிரைப்பில்
ஏமாற்றம்
மீண்டும் ஏமாறுவது
அதன் பிழையில்லை.
வன்மம்
அது அறியாது
3.மிச்சம்
சிறிதான இருமல்
போதுமானதாக இருக்கிறது
அப்படியொரு வேகம்
கேட்டைத் திறப்பதற்குள் வந்துவிடுகிறது
இந்த அன்பைக் காட்டிலும்
இரண்டு துண்டு பிஸ்கட்டுகளை
மிச்சப்படுத்தி
வாழ்ந்தென்ன
கிழித்திடப் போகிறோம்.
4.டிக்காசன் நிற நிலவு
நள்ளிரவில்
பணியிலிருந்தவன்
தன் தேநீரை
நிலவோடு பகிர்ந்தான்
சற்றே தூக்கலான டிக்காசனை
தன் நிறமாக்கிக் கொண்டது நிலவு
கொள்ளை அழகு கொள்ளை அழகென்பதை
அன்றுதான்
கண்டுகொண்டான்.