ரோசாப்பூ ரவிக்கைகாரியின்
“உச்சி வகிடெடுத்து”,
கன்னிப்பருவத்திலேவின்
“பட்டுவண்ண ரோசாவாம்”
ஆகிய இரண்டு பாடல்களை
எங்கு கேட்டாலும்
அசையாமல் நின்றுவிடுவாள் அம்மா
வீட்டில் ஏதேனும் வேலையாக
நடந்து கொண்டிருந்தாளெனில்
நடை தளர்ந்துவிடும்
சந்தையில்,
கடைத்தெருவில் இருந்தாளெனில்
ஒரு ஓரமாக நின்றுகொள்வாள்
வீட்டிலிருக்கும்போது
கன்றில்லாத பசுவின் மடியில்
காம்பு சுரத்து ஒழுகுவதைபோல
அம்மாவின் கண்களில் கண்ணீர் வழியும்
பொதுவெளியில் கேட்டுவிடும்போது
முந்தியின் ஓரத்தை எடுத்து
தூசை துடைப்பதுபோல்
கண்களை துடைத்துக்கொள்வாள்
இச்செய்கை
எல்லோரும் உறங்கும் வேளையில்
வந்துவிட்டு போகும் மின்னலைப்போல் இருக்கும்
வீட்டில் எல்லோரும் சென்றுவிட்ட
தனிமையில்
எதாவது ஒரு பாடலை
வாய்க்குள் முணுமுணுத்தபடி இருப்பாள்
அப்பொழுதெல்லாம்
இது அந்த பாடல்கள் தானாவென
யூகிக்க முயல்வேன்
அது
வேறொரு தாலாட்டாக மாறிவிடும்.