cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 32 கவிதைகள்

இரண்டுற மொழிதல்


1. தலைவன் தலைவி படலம்

  • ராஜா

ஏரிக்கரை…
தலைவனும் தலைவியும்…
மணிகள் ஒலிக்கின்றன.
குழல்கள் மீட்டுகின்றன.

குதிரையிலேறி கந்தர்வ மணம் புரிகிறார்கள்
கண்ணால் ஒரு சேதி சொல்கிறாள் தலைவி
நீங்கமாட்டேன் என சத்தியம் செய்கிறான் தலைவன்
வயலின்கள் குளம்புகள் தெறிக்க ஒடுகின்றன.

போர் முரசு ஒலிக்கிறது
கறுத்த தலைவன் வாள் ஏந்துகிறான்
எதிரிப்படை நடுங்கி காத்திருக்கின்றது
யாருக்கும் வெற்றியில்லை தோல்வியில்லை
முதல் நாள் போர் முற்றுப்பெறுகிறது
சுந்தரியின் காதல் பின்னணியில் ஒலிக்கிறது
செனாய்கள் கூக்குரலிடுகின்றன.

ஊமை தெய்வத்திடம்
விளக்கேந்தி நின்று வாய்மொழி
வார்த்தைகளின் நியாயம் கேட்கிறாள் தலைவி
குழல்கள் கனைக்கின்றன.

அடுத்த நாள் போர்க்களத்தில்
வாள்பிடித்து நின்றாலும்
நெஞ்சில் அவள் ஊர்வலத்தை ஒர்மிக்கிறான் தலைவன்
பேரிகைகள் ஒலிக்கின்றன
சிதார் கதறுகிறது.

போர் தொடர்கிறது
வாரங்கள் மாதங்கள்
ட்ரம்பெட்டுகள் புல்வெளியை ஆக்கிரமிக்கின்றன.

பாலைத்திணையில் பூக்கள் பூப்பதை தலைவியும்
வாரங்கள் மாதமாவதை தலைவனும் அரற்றுகிறார்கள்
ஒற்றை வயலின் பிளிறுகிறது.

மூன்றாம் கட்டப் போர்
தலைவன் வெல்கிறான்.
‘வெட்சி’ ‘வெட்சி’ புல்வெளியும் பறையும் ஒத்ததிர்கிறது.

போர் ஓய்ந்துவிட்டது
விடியல்
படைகள் சூழ வாகை சூட
வாளை உயர்த்தியபடி தலைவன் வருகிறான்
இருபுறம் நிழலாய் குதிரைகள் வழிவிட
தலைவன் கைகளில் கன்னம் புதைக்கிறாள் சுந்தரி …

ஒரே ஒரு குழல் முடித்துவைக்கிறது.
போரை…. பிரிவை…

****

  • ரஹ்மான்

தீ, முள்வேலி,மணல் மூட்டைகள், துப்பாக்கி ஏந்திய கைகள்
கலவரம் பரவுகிறது..
சிறுபறைகள் அதிர்கின்றன
சிறுமணிகள் ஆடுகின்றன.

தலைவனும் தலைவியும்
காதலில் கலக்கிறார்கள் அந்த போருக்குள்
பின்னணியில் குண்டுகள் வெடித்ததிர தீ பற்றியெரிய
சூடு கூடுகிறது காதலற்குள்ளும்

இராணுவப்படை துரத்துகிறது
ஸ்வரங்கள் படியெங்கும் பாய்கிறது.

பெண் நெஞ்சே சிறைதானா
தலைவன் கேட்கிறான்
தாளங்கள் அணிவகுகின்றன.

சருகுகள் பறந்து மூடி புதைக்கின்றன காதலை
ட்ரம்சுகள் சிதறடிக்கிறது மண்ணை.

பவள மாலை
கல்லறை பூக்கள்
கலவரம் முற்றுப்பெறுகிறது
குரலிசை உச்சம் பெறுகிறது.

குழந்தைகள் குதூகலித்து நடனமாடுகின்றன
பேஸ் கிட்டார் தோட்டாக்களைத் துப்பித் தீர்க்கிறது.

தலைவன் தலைவிக்கு காத்திருக்கிறான்.
மீண்டும் அழுகையோடு குரல்கள் கேவுகின்றன
பேங்கோவும் மேண்டலினும் கூட அழுகின்றன
ஓஓஓஓஓ …பால் நதியே நீ எங்கே? .

உடைந்த வளையல்
தொங்கு பாலம்
காய்ந்தாலும் அடி ஈரம் காயாத
மண்ணோடு மழைகொண்ட பந்தம் தலைவியின் பந்தம்
கோரசாய் எழுகிறது கூட்டுக்குரல்கள்.

வாழ்வின் ஓரம் வந்த செந்தேன்
ஓடி வந்து தழுவிக் கொள்கிறது தலைவனை.
மெல்ல மெல்ல ஓய்ந்து ஓய்ந்து
ஊஞ்சலைப் போல ஆடி ஆடி நிற்கிறது தாளம்

கண்ணீர் வழிகிறது சந்தோஷக் கண்ணீர்.


2. ஃபைட்டர்

  • அவன்

காற்றில் கைவீசுவதை
நீங்கள் சண்டையென நினைத்துக்கொண்டால் என்ன செய்ய?
வலப்பக்க கைவீச்சு வலப்பக்க நுரையீரலை நிரப்புகிறது
இடப்பக்க கைவீச்சு இடப்பக்க நுரையீரலை நிரப்புகிறது
ஒரு அடவு பூனையாக இருக்கிறது
மற்றொன்று நெருப்புப்பந்தாக இருக்கிறது
பிறிதொன்று குரங்காக இருக்கிறது
டிராகனும், சிங்கமும், புலியும், பாம்புமாய் ஒவ்வொன்று
நீங்கள் மிருகங்களென நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்ய?

****

  • அது

சிறு குடுவை நீரில் அடைத்து வைத்திருக்கிறார்கள்
என் செதில்களால் அடவு பிடிக்கிறேன்
இதோ கொலை செய்யாத கொலைகாரன்
சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்
இதுவரை வாழ்நாளில் ஒரு சண்டையும் இட்டதில்லை
இனியும் சண்டையிட ஆசை இல்லை
இது பெயரால் ஆன தனிமை
பெயரின் தனிமையைத் துறக்க எனக்குத் தெரியவில்லை
அவன் அந்த பனிப்பிரதேசத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்கிறான்…

அது அந்த குவளைக்குள் நீந்திக்கொண்டிருக்கிறது

சண்டையொரு தியானம்
தியானமொரு சண்டை

அவனொரு பைட்டர்
அதுவொரு துறவி


3.கலை

  • தூரிகை வாள்

அடுத்தடுத்து இரு திரைகளில் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன…

முதல் திரையில் பதின்ம வயது சிறுவன்
சுவரில் சிறு கோடுகளை கரிக்கட்டியால் வரைந்து பழகுகிறான்

இரண்டாம் திரையில் அதே பதின்மச் சிறுவன்
கத்தியால் ஓர் உடலில் சிறு கோடிட்டு விட்டு ஓடுகிறான்.

கரிக்கட்டி தூரிகையாகிறது எங்கும் வண்ணம்
கத்தி வாளாகிறது எங்கும் ரத்தம்

கைகள் பரபரப்பாக வேலை செய்கின்றன
கால்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன

தலையை வரைந்து முடித்து கண்களைத் திறக்கிறான்
தலையைக் கொய்துவிட்டு கண்களை மூடிப்போகிறான்

கைகள் கால்கள் நெஞ்சு வயிறு சரிந்த கித்தான்களில் ஓவியமாகின்றன
கைகள் கால்கள் நெஞ்சு வயிறு சரிந்து வீழ்கின்றன
உருவங்கள் சுவர்களைஅலங்கரிக்கின்றன
உருவங்கள் போஸ்டர்களில் அஞ்சலி அடைகின்றன.

தளர்ந்த தூரிகையை கழுவுகிறான் வண்ணங்கள் பெருக்கெடுத்து ஓடுகிறது

உலர்ந்த வாளைக் கழுகிறான் ரத்தக்கறை பெருக்கெடுத்து ஓடுகிறது

‘’இனிமேல் உன்னால் அதை கீழே போட்டுவிட முடியாது…அசரீரி ஒலிக்கிறது..’’

‘’இனிமேல் உன்னால் அதை கீழே போட்டுவிட முடியாது…அசரீரி ஒலிக்கிறது..’’

திரைகள் இரண்டும் ஒன்றாகி இருள்கிறது….


கவிதைகள் வாசித்த குரல்:
அன்பு மணிவேல்
Listen On Spotify :

About the author

சிவசங்கர் எஸ்.ஜே

சிவசங்கர் எஸ்.ஜே

எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.

இவரது நூல்கள்:

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)

( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website