அம்மாவுக்குப் பிடித்த உடைகள்.
அப்பாவுக்குப் பிடித்த பள்ளி, கல்லூரி..
பட்டப்படிப்பின் பிரிவு அண்ணனின் தேர்வு.
பணியிடம் மாமாவின் தேர்வு.
சித்தப்பா சித்தியின் “பரிசாக”..
அவர்களுக்குப் பிடித்த வாகனம்..
அலுவலகத்தில் ஆண்களும் அருகே இருப்பதைப் பார்த்துப் பதறி
மாமன் மகனை “மாப்பிள்ளை” யாய் கா(க)ட்டியது
தாத்தா பாட்டியின் குடும்ப கௌரவம்.
கணவருக்குத் தேவைகளை நிறைவேற்றும் தே”வதை”..!!
பிள்ளைகளுக்கு தியாகத்திருஉரு…!
எல்லோருக்கும் தன்னை பகிர்ந்தளித்துவிட்டுத் திரும்பிப்பார்க்கிறாள்.
தனக்கு தானே மிச்சமில்லாததை..!!
- எங்கிருந்து வந்தாய்…?
சிலேட்டுக்குச்சிகளையே சிறையென்றாக்கி
உன்னை பூட்டிவிட்டல்லவா வந்தேன்…???!!!
எங்கிருந்து வந்தாய்..??
பட்டாம்பூச்சியும், பொன்வண்டும் சிறை கிடந்த தீப்பெட்டியில்
உன்னைப் பூட்டி எறிந்தேனே…!!!???
எப்படி மீண்டாய்…!!!???
எங்கிருந்து வந்தாய்??
பால்யத்தின் நினைவின் படிமங்களைக் கீறியபடி
முளைத்தெழுகிறாய் விதையென…!!
இம்முறை உன்னை நினைவில் மறைக்கப்போவதில்லை….
தேர்ந்த சொற்களால் கூறிட்டு
வரிவயல்களின் நடுவே புதைக்கப்போகிறேன்….
மீண்டும் கிளை விரிக்கிறாய்….!!!
மழைக்கால மல்லிகை பதியன் போல…!!
இல்லை, இம்முறை உன்னை விடப்போவதில்லை.
நீ எழுதிக்குவித்த வரிகளோடு எரித்தேன்.
நறுமண புகைக்கூடாகி உயிர்கூடடைகிறது உன் வாசம்…!!
ம்ஹூம்….! வேறு வழியே இல்லை.
இம்முறை உன்னை என்னோடு கலந்துவிடுகிறேன்.
என்னில் கரைந்து போய்
எப்படித் தனித்து முளைக்கிறாய் என்று பார்க்கிறேன்…!!
வாசலோர மணிக்கொத்தில்
அமர்ந்த பறவையொன்று இசைத்துப்போகிறது உன்னை.
நறுமண புகைக்கூட்டிலிருந்து விரிகிறது
ஒரு பேரிலக்கியத்தர நாடகம்.
சுருள் குழலாய் மிதந்து, உயர்ந்து,
அலைந்து, சுழன்று பரவும்
நினைவுகளில் தேர்ந்த நடனக்கலைஞனின் சுழற்சி.
காற்றாகும் புகைச்சுருள்கள் உன் வாசம் நிரப்பியபடி
நினைவுப்படிமங்களை கிழித்துக்கடந்து உயிர் தொடுகிறது.
மலைக்குகை கருவறையில்
என்றோ ஏற்றி வைத்த சுடர் வெம்மை பரவ
ஒளிரத்தொடங்குகிறது விழிகள்..!
Courtesy : Painting – Ricardilus | Domestika
வரிகளின் கோர்வை அழகு
நன்றியும் அன்பும் அண்ணா 😍🙏🙏🙏