- திரிதல்
நான் மயக்கம் கொள்கிறேன்.
எனது மென் இதயத்தில்
வல்லுறவிற்கு ஆளான
துவளச் செய்யும் நரம்புகள் இல்லை,
இறகுக் கீற்றுக்களால் வேய்ந்த
கனமான கண்ணீர்,
எப்பொழுதாவது
நீ சிந்திய காதல் மையை
ஏந்தி இறங்குகிறது.
வழிந்தோடும் இடமெல்லாம்
செங்குருதியின் வாடை.
ஒரு வட்டத்துக்குள் என்னை
அடக்குகிறாய்…
நான் மறிக்கும் போதெல்லாம்
என் காதருகே, நீ புலம்பும்
நானற்றவளாய் எப்படி நிற்பேன் என்ற
எப்போதும் சொல்லும் மொழியின்
சத்தம் கேட்டு எழுகிறேன்..
பாலின் வெண்மைக்குள்
நுரைத்துப் பொங்கிய பாக்டீரியாவாய்
என்னைக் கொண்டாட நினைக்கிறேன்.
நீ என் வெண்மையை ஒரு துளி அமிலம் கலந்து
திரிந்து விடச் செய்கிறாய்..!
- வாழ்வும் அப்படித் தான்.
சாவிற்கான பயணத்தில் அனைவரும் வெற்றி பெறுகின்றனர்.
மழைத்துளியின் ஈரம்
மண்ணை முட்டி அதன்
பயணத்தை நிறைவு செய்கிறது.
ஒரு புல்லோ, விதையோ
ஏதோ ஒரு மழைத்துளியினால் துளிர்க்கிறது.
கனவுக்கு மேல் எட்டிப் பார்க்கும்
மானுட மனம்…
எப்படியும் மனம் சொல்வதையும் கேட்காது.
கூரைகளில் ஓடி மறையும் அணில்களும்
வாழ்வின் இருப்பை எண்ணிக் கொள்வதில்லை.
எந்த நம்பிக்கையில் காலை துவங்குகிறதோ ,
எந்த நம்பிக்கையில் மாலை முடிகிறதோ…..
வந்து இளைப்பாறுகிறதா மனம்.?
அன்பு எங்கும் நிரம்பட்டும்.
அன்பைத் தேடிக்கொண்டே நாட்கள் கனமாகி விடுகின்றன.
காடற்ற பட்டாம்பூச்சிகளுக்கும்,
ஏதோ ஒரு பூ சொந்தமாகி விடுவதை
தடுக்க முடியாது.
முந்திக் கொண்டு
பூமி தொடும் முதல் மழைத்துளி
எங்கோ ஒரு மண்ணை நனைத்து
விடுகிறது.
வாழ்வும் அப்படித் தான்..!
- இருத்தல் நிமித்தம்
நீ ஆரத் தழுவுகின்ற நாட்களில்
மழையின் உச்சரிப்பு
உன்னில் கரைந்து கொண்டிருந்தது.
மீண்டும் பூக்கும் பூக்களில்
சூரியனின் முகம்.
விடைபெற்று எழுந்த நாட்களில்
வழிந்து ஓடாத கண்ணீர் எட்டிப் பார்த்து சாட்சி சொல்லியது.
உன்னில் சிறு புன்னகையை
உதிர்க்கிறாய்.
உறக்கம் கலைக்கிறாய்.
காம்பின் முனைகளில் நழுவும்
தண்ணீர் துளிகளில் எனக்கான பிம்பத்தை சேகரிக்கிறேன்.
காற்று பல எச்சங்களை என் நாசிக்குள் நுழைப்பதை
நான் கவனிக்கவே இல்லை.
மூங்கிலில் நுழையும் அதே
காற்று தான்.
என்னை மட்டும் மூச்சிரைக்கச் செய்கிறது.
நஞ்சுண்டு நரம்புகளில்
இரத்தம் பீரிடும் சத்தம்
ஒருவருக்கும் கேட்பதே இல்லை.
மாய்த்துக் கொள்ளும் முகங்களில்
இட்ட எச்சங்கள் மட்டும் மீதம்.
ஓலமிடும் நரிகளுக்கு இறந்தது யாரென்று தெரியாது.
- நிதர்சனம்.
நீ நின்ற தூரத்தில்
என் கண்ணிமைகள் இமைக்காமல்
படபடக்கின்றன.
வெகுவாக பாராட்டத்தக்க ஒரு
போராட்டத்தை முன்னெடுத்து
நீ வேகமாகப் பயணிக்கிறாய்,
அதில் தழும்பிற்குத் தயாரான
சில அடிகளுடன் தப்பித்திருக்கும் உன்னிடம், நான்
சொல்வதற்கு எதுவுமே இல்லையே,
எப்போதும் போல் உன்னைக்
கடந்து உன்னில் ஒரு
ஏக்கப் பார்வையை
விதைத்துச் செல்கின்றேன்.
அம்புகளுடன் படுக்கும் மலர்வனத்திற்குள்
நிறைய காக்கைகள் கூடு
கட்டி இருந்தன.
அவற்றின் எச்ச வாசத்தில்
நீரின் படிமம் ஒட்டி இருக்கிறது.
நான் புரட்டிப் போடப்பட்டிருக்கிறேன்.
என் தனிமையை விலக்கும்
அம்புகள் எந்த மலரையும்
தைக்கவில்லை.
புல்லின் நீளத்துடன்
உளமானது ஒப்பிட்டு
மடிந்தே விட்டது..
Congrats madam..!