உண்மை அதுபாட்டுக்கு இருக்க
இம்மையை உருவாக்குகிறார்கள்
மறுமையை உருவாக்குகிறார்கள்
மூன்றுக்கும் இடையே
முரணை உருவாக்குகிறார்கள்
மனிதர் அவர்பாட்டுக்கு வாழ்ந்துகொண்டு இருக்க
சாத்தானை உருவாக்குகிறார்கள்
கடவுளை உருவாக்குகிறார்கள்
மூவருக்கும் இடையே
மோதல்களை உருவாக்குகிறார்கள்
நிலங்கள் பரந்து விரிந்திருக்க
நாடுகளை உருவாக்குகிறார்கள்
எல்லைக் கோடுகளை உருவாக்குகிறார்கள்
கோடுகளின் பொருட்டு
நாடுகளுக்கு இடையே
போர்களை உருவாக்குகிறார்கள்
இயற்கை அற்புதமாய் இருக்க
அதன் மேல் கற்பனையாகப் புனிதத்தை ஏற்றுகிறார்கள்
அனிதத்தை ஊற்றுகிறார்கள்
அற்புதத்தை அற்பமாக்கி
அற்பத்தை அற்புதமாக்கி
விற்பனையை விரிவுபடுத்துகிறார்கள்
பின்னர்
மக்கள் எல்லாம்
அந்த இந்த எந்தெந்த
சிக்கல்களில் எல்லாம் சிக்கி
திக்கி முக்காடக் கண்டு
இக்காலம் எக்காலம் முக்காலமுமதில்
சுழன்றழன்றுழலக் கண்டு
இல்லறத்துறவற அறமுற்றறுத்து
நிதிமதிகதியாக்கையுச்சம் பெற்று
தளர்ந்துலர்ந்து
கடமை முடிந்ததென்று
துண்டை உதறித் தோளில் போட்டுகொண்டு
” எல்லாம் அவன் செயல்” என்று
போய் விடுகிறார்கள்
போயே விடுகிறார்கள் !