cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 கவிதைகள்

பூவிருந்தவல்லி ~ முளைக்கொட்டு ~ நித்திலா


பூவிருந்தவல்லி

சூடி வாடிய பூவை
தண்ணீரில் மிதக்க விட்டு
மீண்டும் மலர்த்தப் பார்க்கிறாள்

ரோஜாவின் சிகப்பு
செந்தமிழ்
தண்டின் பசுமை
பைந்தமிழ்
தண்ணீரின் தண்மை
தண்டமிழ்

இப்படி
கூந்தலில் சூடி பின் வாடி
மாலையில் பத்திரப்படுத்தி
தண்ணீரில் மிதவையாக்கப்படும் பூ
மறுநாள் மறுபடியும்
கூந்தலில் குடியேறும்

ஒரு ரோஜாவை இப்படியாக
மூன்று நாட்களுக்கு
ஒப்பேற்றி விடுகிறாய்
கண்ணாடியில் ஒட்டி வைத்து
மறுபடி மறுபடி
நெற்றியில் ஒட்டிக் கொள்ளும்
ஸ்டிக்கர் பொட்டாக

தண்ணீரில் மிதக்கும் பூவாக
உன்மீதான நேசத்தில்
மிதப்பதிலே நான்
மூழ்கிப் போகிறேன்

வல்லி என்றால் கொடி
கூந்தலை கொடியாக வைத்துக்கொண்டால்
கூந்தல் பூவிருந்தவல்லி.


முளைக்கொட்டு

அதுவரை இடிக்கும் உரல்களாக
வெறும் கற்களாக கிடந்தவை
கவிழ்த்துப் போட்டு
குலவையிட்டு கும்மி அடிக்க
நிலையில் வைத்த பின்
தொட்டு உணரும் தெய்வமாகிறது

குமரிகள் வட்டமிட்டு
கும்மி கொட்டுவதைக்
காணும் குழந்தைகள்
தாங்களும்
கும்மி அடிக்கிறோம் என்று
அவர்களுக்கு இடையில் புகுந்து கொண்டு முரண்டு பிடிக்கிறார்கள்

அப்போது ஒருவட்டம்
இரண்டு வட்டங்கள் ஆகிறது

இப்போது
வெளிவட்டம் குமரிகளுக்கு
உள்வட்டம் குழந்தைகளுக்கு

கும்மிக்கல்லைச் சுற்றும்
குழந்தைகளின் உள்வட்டம் நிலவு
குமரிகளின் வெளிவட்டம்
நிலவைச் சுற்றும் ஒளிவட்டம்

வட்டங்களுக்கு வெளியே
உட்கார்ந்து கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
பேரிளம் பெண்கள் எல்லாம்
கருமுகில்கள் போல்
தங்களது இளமைக்கால நினைவுகளைச் சுமக்கும் வானம்

தன்ன நன்னே நான நன்னே
தன்னேனே தான தன்னானே
என்ற இரண்டு மெட்டுக்கள் தான்
அனைத்துப் பாடல்களுக்கும்

மெட்டு மொட்டாக
வளை குழுங்க கைக்கொட்டும்போது
பாட்டு பூவாகிறது

மற்ற பாடல்களுக்கு எல்லாம்
ஒருமுறை மட்டுமே
கைக்கொட்டும் பெண்கள்
ஆனிப்பொன்
பாட்டுக்கு மட்டும்
இருமுறை தொடர்ச்சியாக கொட்டி
கொஞ்சம் இடைவெளி விட்டு மூன்றாம் முறையாக கொட்டுகிறார்கள்

வாராலம்மா வாராலே
வடிவழகி வாராலே
வட்ட வட்ட பொட்டழகி
வடக்குத்தெரு மாரியாத்தா
என்று கணபதி பாட்டி படிக்கும் போது
உறங்கச் சென்றால்
ஆனிப்பொன் மண்டப ஊஞ்சலிலே
செல்வ முளைமாரி ஆடுகிறாள்
என்ற பாட்டு பாடும் போது
உண்மையிலே ஊஞ்சலில் வைத்து தாலாட்டியதைப் போன்று
இந்த ஆடிக்காற்றுக்கும் அதுக்கும்
உறக்கம் சொக்கிக் கொண்டு
வந்து சேரும்.


நித்திலா

நதிகள் கூடி கடல் செய்தபோதும்
கடலை நன்னீராக்க முடியவில்லை
உவர்நீர் கடலில்
ஒருதுளி நன்னீர்
நித்திலப் பவித்திரம் நீ.


கவிதைகள் வாசித்த குரல்:
  ராகினி
Listen On Spotify :

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website