களவு
ஒழுங்குகளின் நேசன் அவன்
சூரியன் அவனை எழுப்பியதில்லை
அவன் தான் சூரியனை எழுப்புவான்
நேரம் தவறாமையில் அத்தனை பிடிப்பு
பிள்ளைக்கோ, அவளுக்கோ
அவன் நேரத்தில் ஒரு பிடி தர மறுப்பான்
தன் ஒழுங்கமைவு வேலைகளின் ஊடாக
இளைப்பாறும் நேரம் கிடைக்கையில்
மனைவியை சந்தேகப்படுவதற்கு பயன்படுத்திக் கொள்வான்
தன் மனைவி ஒரு கள்வனின் காதலி என்பதாய்
உயர் ரக மணம் வீசிய அவள் ஆடைகள் அவனை நம்பச் சொன்னது.
தாமதமாய் அவள் வீடு வரும் நாட்களில்
இவன் என்றேனும் முன்னதாகத் திரும்பியிருந்தால்
அவளன்று களவாடி இருப்பதாய் புரிந்து கொண்டு
சாப்பிட்ட பின் சண்டையிடுவான்
பின்னொரு நாளில்
அவள் ஓடி விடுவாளென்று
முன்னதாக அவள் உடைகளை ஒளித்து வைத்தான்,
ஒழுக்கத்தை தொலைத்ததாய் ஊளையிடும் நாயானான்.
அவன் ஒழுங்கு குலைந்தான்,
அவன் சக்கரம் அவள் கால்களில் உருண்டது.
அவளோ இத்தனை வருடங்களில்
எதைக் கொண்டும் களவாட முடியாத
அவன் கைக் கடிகாரத்தை
ஒரு சந்தேகம் திருடிக் கொண்டதை
நித்தமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள்.
‘சில்க் கட்’
கல்லறை வாசலில் விற்கப்படும் குருதி வண்ண ரோஜாப்பூக்களை
காதலிக்கு வாங்கிச் செல்லுமொருவன்
காதலுக்கு இதுவரை தெரியாத செய்தியொன்றை
காதோரம் சொல்லிச் செல்கிறான்.
அதைக் கேட்டு காதல் விசும்பலை அடக்குவதில் தொடங்கி
கதறலில் முடிக்கிறது
காதலியின் சமாதிக்கு
ஒய்யாரமான மனைவியை அழைத்து வருகையில்
அந்த பெண்ணின் வெற்றுக் கண்களையும்
நிறைந்த கழுத்தையும்
உற்றுப் பார்த்து தனக்குள் முணுமுணுக்கிறது காதல்
ஆருப்பா அது ஸாரா? எம்பேரு வச்சிருக்காங்க என்ற குட்டி தேவதையின் கேள்விக்கு
உம்மாதிரியே ஒரு ஏஞ்சல்டா என புறங்கையால் கண் துடைக்கிறான் அவன்
இரு கை நிறைய ‘சில்க் கட்’ சிகரெட்டுகளை
கல்லறையெங்கும் சிதற விடுபவன்
‘சொன்னாக் கேட்டியாடி’ எனச் சன்னமாய்ப் புலம்பியபடி
லேசாய் முகமுயர்த்தி கண்ணீர் கண் தாண்டாமல் பார்த்துக் கொள்கிறான்.
இருந்தாலும் காதல் இன்னும்
கல்லறை வாசல்களில் காத்துக் கொண்டு தான் இருக்கிறது
கணவனை அழைத்துக் கொண்டு
காதலனைக் காண வருமொரு மனைவிக்காக.