தமிழய்யாவின் பிரம்படியாக
சுள்ளென்று முதுகில் அடிக்கிறது
மதியநேர வெய்யில்
மல்லாந்து செத்துக் கிடக்கும் தவளைகளாய்
வெட்டப்பட்ட மரங்கள்
வெக்கை தாங்காது தோள் துண்டைத் தலைக்குப் போர்த்தியபடியே
மாட்டைப் பற்றுகிறார் சம்சாரி ஒருவர்
குடையில் ஒளிந்த படியே இளைஞிகள் நடக்க
தண்ணீர் போத்தலின் ஷவரில் நனைந்த படியாக இளைஞன் ஒருவன்
வாகனங்கள் ஏறிக் கானல் நீர் தெறித்து
துடைத்தபடி செல்லும் பாதசாரிகள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்க்கையில்
புதுரோடு நிறுத்தத்தில்
கண்ணாடிக் குடுவைகளில்
வண்ண மீன்களை
சமைத்துக் கொண்டிருந்தது
இந்த இரக்கமற்ற வெய்யில்
********
நங்கவள்ளி பிரதான சாலையில்
அண்ணா சிலையருகில் வலப்புறம் திரும்பினால்
சேகர் சலூன்
எதிர்ப்புற சுவரில்
வண்டியை நிறுத்தாதேவுக்குக் கீழே
மூன்று வண்டிகள்
வெட்கத்துடன் பதில் வணக்கம் வைக்கும்
வெள்ளை வேட்டி சட்டையணிந்த சேகரின் தந்தையை
இன்று வாசலில் காணவில்லை
தாத்தா தலையைப் பிடிக்க
பீய்ச்சியடிக்கும் தண்ணீருக்கு
முகம் சுளித்து
‘வந்து ரெண்டு மணிநேரம் ஆச்சு’ என சலிக்கும்
இரண்டாம் வகுப்பு சிறுவனை
சத்தத்துடன் ஓடும் மின்விசிறிக்குக் கீழே
ஹாரி பாட்டர் படம் போர்த்தியபடி
சுழல் நாற்காலியிலமர்ந்து
போனில் படம் பிடிக்கத் தயங்கியபடி
சொற்களால் படம் பிடித்த என்னை
இன்றைய காலையில்
பார்த்திருக்கலாம் நீங்கள்