காலமற்ற பொழுதில் கரைந்து.
உதிர்ந்த வார்த்தைகளின்
கூதலில்
நடுங்குகிறது
தேகம்
காதல் சுவையில்
கட்டுண்டதால்.
மழைச் சாரலின்
கதகதப்பில்
கொறிக்கும்
நினைவுகள்
உறக்கத்தை மென்று
காலத்தை விழுங்கியது
கீச்சொலிகள்
கலைக்கும்வரை.
மறுமுறை வரும்பொழுது
மௌனத்தால் நிரப்பிவிடு
மிதக்கும் சலனத்தை
மொண்டு குடித்து
மூர்ச்சையாகி
பரவசத்தில்
திளைக்க.
அறுவடையின் பொழுதில் களையாகிவிடும் பயிர்கள்.
நீங்கள்
வெளியிடத் தயங்கும் வார்த்தைகளால் தைக்கப்பட்டிருக்கிறது
எனது ஆடைகள் அநேகர்களை அசௌகரியம்
கொள்ள வைக்குமாறு.
நீங்கள்
உதிர்க்கத் தயங்கிய வார்த்தைகள் உட்கார்ந்திருக்கிறது சிம்மாசனமிட்டெனது
நாவினில்
சிரச்சேதமிட.
நீங்கள்
மறந்து போன
வார்த்தைகளெல்லாம் மொந்தையில்
ஊறுகிறது.
வலி விசமேறி
நாணேற்றும்
நாள் பார்த்து.
நீங்கள்
அதிகாரம் நக்கி
ஆயுளைக் கூட்டுங்கள்.
கூன் முதுகு நிமிர்த்தாமல்
கும்பிட்டும்,
வரலாற்று பிழை செய்யும்
வாயோடும்
துரோகமிழைத்து
துதிபாடியும்.
உங்கள்
நியாயத் தராசின்
நடுக்கம் புரிகிறது.
கங்கால் கருகிவிடுமெனும்
அச்சத்தால்
தீர்ப்பிட திண்டாடி திணறுவது.
உங்கள்
கணக்குகளை
சமன் செய்ய.
கையாலாகதவனென
கையெழுத்திடுகிறேன்.
அகங்காரத்திற்கு
நீரூற்றி.
எம்
பால்யப் பிள்ளைகளில்
பதியமிடும்
விதைகள்.
விருச்சமாகி
வீழ்த்தியழித்து
கக்குமனலில் கருகுமுன்.
வாடகைக்கு கொடுத்த பெயரை
வாங்கிவிடுங்கள்
தோல் மீது
தொட்டுத் தழுவி
துரோகமிழைக்கும்
சாதியத்தை
கருவருத்து
காணாமலாக்க.
புரிந்துவிடும் பொருட்டான போர்ப் பிரகடனம்.
மீசையின் மிடுக்கு உருவாக்கம்
கைப்பிடி
மயிரைத்தவிர
வேறில்லைதான்
மனக்கலவரத்தில்
மாட்டி நிற்பதை
நிறுத்தும் வரை.
இதன் பொருட்டான
சிகையலங்காரம்
அதன்பொருட்டான
ஆடையும்
அசௌகரியம் தரும்
உனக்கென
அறிந்தே தரிக்கின்றேன்
பார்வையைத் திருப்பி
பாவனையில்
நீ
விழுந்தாலும்.
ஜோடனைக்கு
சூடேறும்
உனக்கு
நசுங்கியவனின்
வலிகள் தெரியாது
இது
படிகளெடுத்த பரம்பரை உயிர்க்கொதிப்பென்பது.
புரையோடிய
ரண சிகிச்சையில்
மீட்டு நிற்கும்
இவ்வேளையின் அதிகார
தருணப்புரிதல்
நிகழ வேண்டியது
உன்னிடம் மட்டுமே.
எதேச்சதிகார
உன் கொதிப்பு
இரத்த மரபணு
மீளாய்வு சோதனையில்
மாறிடாமல் இருக்கும்
உழைத்துக் கொழித்து
உண்டு மகிழ்ந்த
நம் கதைகள்
புரட்டுப்புராணங்கள் கடந்தும்
மாறிடாமல் இப்பொழுதும்.
ஆண்ட பரம்பரையெனும்
அடிமைச் சிறையை
உடைத்தெறியவே
பகல் வேசம் கட்டி நிற்கின்றேன்
புரியுமாவல் மேவ.
எம்மை தீண்டாத கைகள்
உம்மை தீண்டியதாவென
உணரவே இல்லை
ஒருபொழுதும்
அதிகார சிறையில்
பௌருஷம் கொண்டதால்.
கவசம் தரித்து வந்த
காவலன் தான் நீ
காரண கர்த்தனல்லவென்பதை
அறிந்தே
இருக்கின்றேன்
உன் கைவல்ய விலங்கை உடைத்தெறிய.
சாஸ்திர சம்பிரதாய
சரடுகளில்
சிக்கி
குருதி குடித்தவன்தான்
என்றாலும்.
வலிந்தெடுக்கும்
அதிகார
ஒன்று கூடலின்
ஆசுவாச நேரத்தில்
அறிந்தே தீருவாய்
உன் எதிரி நானல்லவென
குற்றப்பரம்பரையானோமென
குறுகுறுத்து.
இப்பொழுதும்
சொல்கின்றேன்
மீசையின் மிடுக்கு உருவாக்கத்தின்
கைப்பிடி மயிர்
என் கடை மயிரைவிட
கேவலம் தான்
இந்தவென்
உரிமைப்
போராட்டத்தின்
உணர்விற்கு முன்னால்.