முடிவிலி
ஆயிரம் மெழுகுகளுக்கு மத்தியில் இருந்தாலும்
அடர்வனத்தில் எரியும் தீப்பந்தமாகவும்..
அலாவுதீன் விளக்கென பாதுகாப்பில் இருந்தாலும்
அதிவேகக் காற்றில் அணையவிருக்கும்
மாவிளக்கு ஒளியாகவும்..
கூட்டத்தில் ஒருவனாகவோ
தனியொருவனாகவோ வாழ விடாமல்
ஆழ்மனத்தின் சிம்னியை
ஏதோவொன்று அரூபமாய்
அடக்கியும் கூட்டியும் விளையாடியது.
ஆராய்ந்ததில் உயிரைக் குடிக்கும் நோய்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை குடித்துக்கொண்டிருந்தது.
ஏறியும் இறங்கியும் எரிந்தது
காதல் தீபத்தின் சுடர்!
*****
வருவது வரட்டும்
காடு மேடேறி
காய்த்துக் கனிந்து கிடப்பவற்றை
கூடை மேல கூடை வைத்து
வீடுகொண்டு சேர்த்தால் போதுமா?
பாலத்தில் ஊஞ்சலாடிய கம்பளிப் பூச்சி
வாலாட்டி மரமேறிய சாம்பல் நிற அணில்
தும்பைச் செடியில் வந்தமர்ந்த ரெட்டைப் பாப்பாத்தி
ஓடை நீரில் குளித்துக் கொண்டிருந்த மைனா
இத்தனையையும் கடந்து
கனிதான் முக்கியமென்று
கடிவாளம் போட்டெல்லாம்
காலத்தைக் கடத்த முடியாது.
காய்க்கும் கனிக்கும் முன்பு
இன்னும் பல தருணங்கள் உண்டென்பதை
அறியாமலே வாழ்ந்து
என்னத்தப் பெருசா சாதிக்கப் போகிறோம்?
*****
கையளவு கடல்
இறுதிவரை வருவாய்தானே?
எனக் கேட்கும்போது – பலரும்
இங்கு தரையில் விழுந்த மீனாய்த்தான் துடிப்பார்கள்
எப்படியாவது கடலில் சேர்வோமென்ற நம்பிக்கையும்
துளியூண்டு ஒட்டிக்கொள்ளும்
அக்கினிநட்சத்திர வெயிலில்
அந்தத் தார்சாலையிலேயே பொசுங்கிக் கிடக்க
ஒருபோதும் யாரும் விரும்புவதில்லை
கடல்வரை இல்லையெனினும்
கையளவு நீரைக் காட்டலாம்தானே!