cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்


  • பிசகு

பத்தமுள்ள பிசகொன்றை
தோளில் சுமந்து திரிகிறேன்.
சிறியதும் பெரியதுமாக சிலுவைகளை
சிலபோது திருவோடுகளை
சுமந்து திரிந்தவன் தான்.

முதுகிலிருந்து வலிப்பதை
கர்ப்பிணிகளின் முகம் போல
சுமந்தவற்றினது வடுக்களை
உரசிப் பார்த்துக் கொள்கிறேன்.

நான் நிற்கிற தெருவில்
ஒரு நாய்
வயிறு வீங்கி பிணியோடு
படுத்திருக்கும் ஆடு
கழுத்து திரும்பாத மனித ஜென்மங்கள்
இன்னும் சில பெயர் சொல்லா மரங்கள்

இவை எல்லாம்
பிசகு அபத்தச் சுருக்கில்
கழுவேற்றி என்னை விடுவிக்க
காத்திருப்பவை.

இவ்விடத்திலிருந்து
ஒரு தெருவுக்கு அப்பால் வரை
நான் திரும்பிய எல்லாச் சந்திகளிலிலுமிருந்து
அவை திரண்டு வந்தவை.

சிறிய பெரிய சிலுவைகளும்
மிஞ்சியிருக்கும் உறுத்தலான
திருவோட்டுச் சிதிலங்களும்
என் புண்ணியத்தை தின்ற பின்னர்
பிசகு அபத்தம்
என்னோடு சலுகையாக
இறந்து போகும்.

குதிரும் ஞானம்
கடக்கும் காலத்தை
அபகரித்துப் போகும்.

ஒரு நிரை அபத்தத்திலிருந்து
எனை தூக்கிலிடும் அவை
என் மீட்பர்களே.


  • மூப்பு

நிலத்தின் கடைநுனி வரை
எனது சொல் வேரூன்றியது.
என் நாக்கை வெந்து
என் சொல் பிளந்தெழுந்த போது
வானத்திலிருந்து வெள்ளிகளெரிந்து
சாம்பலுதிர்த்தன.

எனது சொல்லை நடவென
வெளிகள் கடந்து ரதி தான் வந்திருந்தாள்.
கால்களால் மிதித்த
சொல் மைதூனத்தில்
மூத்தோரின் பாடல்களைக்
கவனமாகப் பாடினாள்.

நாக்கு வெக்கை உள்ளங்காலைச்
சுடுவதாக ரதி சொன்ன போதெல்லாம்
வெள்ளிச் சாம்பலை ஒற்றிக்
கட்டிவிட்டேன்.

இப்போது நினைத்தாலும்
நகைப்பாகவிருக்கும்.
தேவதைகளுக்கு ஏது காயம்,
அவர்களுக்கு தேவை சொல்;
பாடுமூப்பில் கால் மிதியும்
மைதூனச் சொல்.


 

About the author

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website