தொந்தரவுக்குள்ளாகி
ஓட்டம் நிற்பதாக இல்லை
அதன் துல்லியம் குறித்து நூறு பக்கங்களுக்கு
விதிகளை வாசிக்கிறாய்
இடறுகின்ற பாதமும் நகைக்கின்ற பாதையும்
தொடர்ந்து மேவுகின்றன
அடிகளை
எனக்கிந்த விளையாட்டு பிடிக்கவில்லை
நம் சமரசத்தின் எல்லையை
அகலப்படுத்திட
அழைத்திருந்தேன்
உள்ளங்கையளவேயான போன்சாய் மேஜையொன்றை
எடுத்துக்கொண்டு வருகிறாய்
என் காகிதங்களின் மீது கிளை விரித்து வைத்து
அதிலமர்ந்துகொண்டு
மோவாயைத் தடவியபடி
மீண்டும்
விதிகள் குறித்து அளவளாவுகிறாய்
இதற்காகவா
காலையில் வந்து காலிங் பெல்லை அழுத்தினாய்
ஒரு தேநீர் பருகும் இடைவெளிக்குள்
பரஸ்பரம் அவியும் வார்த்தைகளிலிருந்து பிரிந்து அலைகின்ற
இளஞ்சூட்டு புகைக்குள்ளே
வெந்து நொதியும் இலையின் நிறத்தை
வேடிக்கைப் பார்க்கிறோம்
அமைதியாக
அமைதியாக
பின்னும் அமைதியாக
●●●
அதுவொரு வாய்ப்புமல்ல
மழைத்துளிகளின் புகார்களை
வனத்தின் செழிப்பு
நிராகரித்தது
நிலத்தைத் தொடும் முன்பே
மரங்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் கடமை
கிளைகளுக்கு இருந்ததாக
மரங்கொத்தி பறவைகள் தம் சாட்சியத்தை
கொத்தி வைக்கின்றன வனமெங்கும்
நீக்கமற
துளைகளுக்குள் குடி புகும் இருளை
விரல் முட்டு மடக்கி
தட்டித் தட்டி நலம் விசாரிக்கிறது
சிறு வெயில்
பதிலுக்கு
உள்ளிருந்து கொஞ்சமாய் எட்டி வெளிநோக்கிட
பிளந்திருக்கும் அலகுகளின்
கடுஞ்சிவப்பில்
நிறமழிந்து திரண்டிருந்தன இரண்டொரு வனத்துளிகள்
●●●
நீங்கள் வராமலிருந்திருக்கலாம்
அறையை விட்டு வெளியேறும்போதெல்லாம்
மணலாகி உதிர்கிறேன் வெவ்வேறு பாதைகளில்
வெவ்வேறு காரணங்களால்
கானல் நீரில் பரவி காத்திருக்கும்போது
எவரோ என்மீது பரவி தாகம் தீராமல் சாகிறார்
எந்தவொரு காரணத்தையோ தொலைத்த
நிலையென
பொழுது ஓய்ந்து
அறைக்கே மீண்டும் திரும்பும்போதெல்லாம்
சுவர்க்கண்ணாடியின் மீது
இரவாகி பரவுகிறேன்
மறந்திடாமல்
மறந்திடாமல்
பிறகு
வேறெவரோ ஒருத்தரின் தூக்கத்திற்கான பள்ளத்தாக்கு
சரிவுதோறும்
முளைவிடத் தொடங்குகிறேன்
இருளின் சல்லி வேர்களை நீளச் செய்து
நாளைய வாசல் கதவாகப் போகும் மரத்தின் அடித்தூரை
வளைத்துக்கொள்ளும் பொருட்டு
ஈரமாக
ஈரமாக
மேலும் ஈரமாக
●●●
சுழி
கருநீல வானின் நிழற்கோட்டுச் சித்திர வளைவுகளை
நுனி பிடித்து
அலைந்து அலைந்து
தீர்ந்து போகிறது துவள்மஞ்சள் புள்ளி
பார்க்கப் பார்க்க இல்லாமலாகிறது
அதுவே
வேறொன்றுமில்லை
சுட்டிக்காட்ட
அது ஒரு
கொடுங்கனவு
அதுவொரு தொலைதூரம்
அது ஒரு
மௌனத்தயவு
அது
ஒரு அப்ஸ்ட்ராக்ட்
மிகவும் சிறப்பான வரிகள்